

டேராடூன்,
உத்தரகாண்டில் உள்ள பத்திரிநாத்தில் புகழ்பெற்ற ஆலயம் உள்ளது. மலைப்பகுதியில் உள்ள புனித தலத்திற்கு நூற்றுக்கணக்கான யாத்ரீகர்கள் சென்று வழிபாடு நடத்தி வருகின்றனர். இந்த நிலையில், பத்ரிநாத்தில் இருந்து ஹரித்வாருக்கு ஐந்து யாத்ரீகர்களுடன் ஹெலிகாப்டர் ஒன்று புறப்பட்டது.
இந்த ஹெலிகாப்டர் புறப்பட்ட சில விநாடிகளில் விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில், ஹெலிகாப்டரில் பணியாற்றிய என்ஜினியர் ஒருவர் பலியானார். பைலட் காயம் அடைந்தர். ஹெலிகாப்டரில் இருந்த பயணிகள் அனைவரும் பத்திரமாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஹெலிகாப்டரின் இறக்கையில் சிக்கி என் ஜினியர் பலியானதாக உள்ளூர் காவல்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். மும்பையைச்சேர்ந்த தனியார் நிறுவனம் ஒன்றிற்கு சொந்தமான இந்த ஹெலிகாப்டர் அகஸ்டா 119 ரகத்தை சேர்ந்தது ஆகும். ஹெலிகாப்டர் விபத்து குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.