"மருத்துவமனைகளில் பாதுகாப்பை அதிகரியுங்கள்" - மாநில அரசுகளுக்கு மத்திய அரசு உத்தரவு

மருத்துவமனைகளில் பாதுகாப்பை அதிகரிக்குமாறு மாநில அரசுகளுக்கு மத்திய சுகாதாரத்துறை அறிவுறுத்தி உள்ளது.
"மருத்துவமனைகளில் பாதுகாப்பை அதிகரியுங்கள்" - மாநில அரசுகளுக்கு மத்திய அரசு உத்தரவு
Published on

புதுடெல்லி,

கொல்கத்தாவில் உள்ள ஆர்.ஜிகர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனை கருத்தரங்க கூடத்தில் கடந்த ஆகஸ்ட் 9ம் தேதி பெண் மருத்துவர் சடலமாக மீட்கப்பட்டார். பரிசோதனையில் அவர் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டது தெரியவந்தது. இந்தச் சம்பவம் நடந்து சில நாட்களுக்கு பிறகுதான், மருத்துவர்களின் போராட்டத்தால் நாடு முழுவதும் வெட்டவெளிச்சமாகி பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இது தொடர்பாக மருத்துவமனையில் தன்னார்வலராக பணியாற்றிய சஞ்சய் ராய் என்பவர் கைது செய்யப்பட்டார். இதனைத்தொடர்ந்து மருத்துவமனையின் முன்னாள் முதல்வர் சந்தீப் கோஷ் உட்பட பலரிடம் சி.பி.ஐ. விசாரணை மேற்கொண்டு வருகிறது.

இந்நிலையில் மருத்துவமனைகளில் பாதுகாப்பை அதிகரிக்குமாறு மாநில அரசுகளுக்கு மத்திய சுகாதாரத்துறை அறிவுறுத்தி உள்ளது. இதுதொடர்பாக அனைத்து மாநில தலைமைச் செயலாளர்கள் மற்றும் டி.ஜி.பி.க்களுக்கு மத்திய சுகாதாரத்துறை செயலாளர் அபூர்வா சந்திரா கடிதம் எழுதி உள்ளார்.

அதில், நோயாளிகள் பொதுமக்கள் அதிகம் வரும் மருத்துவமனைகளில் பாதுகாப்பை அதிகரிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் மருத்துவமனைகள், அதிக அபாயம் உள்ள பகுதிகளில் சிசிடிவி கேமராக்களை நிறுவுவதோடு அவை முறையாக செயல்படுவதை உறுதி செய்ய வேண்டும் என்றும் சுகாதாரத்துறை பணியாளர்களுக்கு எதிராக விரும்பத்தகாத சம்பவங்கள் நடைபெற்றால் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மருத்துவமனைகளில் குடியிருப்பு வாசிகள் மற்றும் மாணவர்களை உள்ளடக்கிய உள் பாதுகாப்பு குழுக்களை உருவாக்க வேண்டும் என்றும் சிசிடிவி காட்சிகளை உள்ளூர் காவல்துறையிடம் விரைவாக பகிரும் வகையில் வழிமுறையை வகுக்க வேண்டும் என்றும் அந்த கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com