பாஜக வேட்பாளர் தோல்வி: தெரு விளக்குகள் அகற்றப்பட்டதால் பரபரப்பு

தேர்தல் முடிவுகள் வெளியான சில மணி நேரங்களிலேயே மின்சாரத் துறை ஊழியர்கள் வாகனத்தில் வந்து கிராமத்தில் பொருத்தப்பட்டிருந்த சுமார் 50 தெருவிளக்குகளை அகற்றியதாக கூறப்படுகிறது.

பாஜக வேட்பாளர் தோல்வி:  தெரு விளக்குகள் அகற்றப்பட்டதால் பரபரப்பு
Published on: 

ராஜஸ்தானில் பஞ்சாயத்து தேர்தலில் பாஜக வேட்பாளர் தோல்வியடைந்த சில மணி நேரங்களிலேயே கிராமத்தில் இருந்த 50-க்கும் மேற்பட்ட தெருவிளக்குகள் அகற்றப்பட்ட சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ராஜஸ்தான் மாநிலம் டோங்க் மாவட்டம் பீப்லு பஞ்சாயத்து சமிதிக்கு உட்பட்ட 2-வது வார்டில் உள்ள ஒரு கிராமத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது.

நிவாய் தொகுதி பாஜக எம்.எல்.ஏ. ராம் சஹாய் வர்மாவின் தனி உதவியாளர் அலோக் சர்மாவின் மனைவி பிரியங்கா சர்மா, பஞ்சாயத்து தேர்தலில் பாஜக சார்பில் போட்டியிட்டார். அவரை எதிர்த்து காங்கிரஸ் சார்பில் தன்னா லால் போட்டியிட்டார். இதில் தன்னா லால் 751 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.இதற்கிடையே, தேர்தல் பிரசாரத்தின்போது கடந்த அக்டோபர் 24-ந்தேதி கிராமத்தின் பல்வேறு பகுதிகளில் தெருவிளக்குகள் பொருத்தப்பட்டன. இதனால் நீண்ட நாட்களாக இருளில் மூழ்கியிருந்த தெருக்கள் இரவில் வெளிச்சம் பெற்றதாக கிராம மக்கள் தெரிவித்தனர்.

அகற்றியது ஏன்?

இந்த நிலையில், தேர்தல் முடிவுகள் வெளியான சில மணி நேரங்களிலேயே மின்சாரத் துறை ஊழியர்கள் வாகனத்தில் வந்து கிராமத்தில் பொருத்தப்பட்டிருந்த சுமார் 50 தெருவிளக்குகளை அகற்றியதாக கூறப்படுகிறது.இதனால் அதிர்ச்சியடைந்த கிராம மக்கள், பாஜக வேட்பாளர் தேர்தலில் தோல்வியடைந்ததால் தெருவிளக்குகள் அகற்றப்பட்டதாக குற்றம் சாட்டினர். மேலும், தேர்தலுக்கு முன்பு விளக்குகள் பொருத்தப்பட்டபோது நடவடிக்கை எடுக்காத அதிகாரிகள், தேர்தல் முடிவு வெளியானதும் அவற்றை அகற்றியது ஏன் என்றும் கேள்வி எழுப்பினர்.

ராஜஸ்தானில் பரபரப்பு

ஆனால், அனுமதியின்றி தெருவிளக்குகள் பொருத்தப்பட்டிருந்ததால் அவற்றை அகற்றியதாக பீப்லு மின்சாரத் துறை உதவிப் பொறியாளர் கோவர்தன் சவுத்ரி தெரிவித்துள்ளார். மற்ற வார்டுகளிலும் அனுமதியின்றி பொருத்தப்பட்டுள்ள தெருவிளக்குகள் அகற்றப்படும் என்றும் அவர் கூறினார். இதற்கிடையே, தெருவிளக்குகள் அகற்றப்பட்டதில் தனக்கோ அல்லது தனது தனி உதவியாளரின் மனைவிக்கோ எந்த தொடர்பும் இல்லை என்று பாஜக எம்.எல்.ஏ. ராம் சஹாய் வர்மா மறுப்பு தெரிவித்துள்ளார். தேர்தல் தோல்வியை தொடர்ந்து தெருவிளக்குகள் அகற்றப்பட்டதாக எழுந்துள்ள இந்த குற்றச்சாட்டு ராஜஸ்தானில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

X