

பெலகாவி:
முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை பெலகாவியில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-
மீண்டும் மந்திரி பதவி
பெலகாவியில் சட்டசபையின் குளிர்கால கூட்டத்தொடர் தொடங்கியுள்ளது. இந்த கூட்டத்தொடரில் முன்னாள் மந்திரிகள் ரமேஷ் ஜார்கிகோளி மற்றும் ஈசுவரப்பா ஆகியோர் கலந்து கொள்ளவில்லை. கூட்டத்தொடரை அவர்கள் புறக்கணித்துவிட்டனர் என்று சொல்ல முடியாது. அவர்கள் 2 பேர் மீதான குற்றச்சாட்டில் உண்மை இல்லை என்று விசாரணையில் தெரியவந்துள்ளது.
அதனால் தங்களுக்கு மீண்டும் மந்திரி பதவி கிடைக்க வேண்டும் என்று அவர்கள் எதிர்பார்க்கின்றனர். இதில் தவறு இல்லை. இதுகுறித்து நான் டெல்லி சென்று இருந்தபோது கட்சியின் மேலிட தலைவர்களிடம் பேசினேன். அவர்களும் சாதகமான பதிலை கூறியுள்ளனர். அவர்களுக்கு மீண்டும் மந்திரி பதவி வழங்குவது குறித்து ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது. இன்னும் சில தகவல்கள் உள்ளன. அதுகுறித்து அவர்களிடம் பேசும்போது கூறுவேன். அந்த தகவல்களை பகிரங்கமாக கூற முடியாது. அவர்களுடன் நான் தொடர்ந்து தொடர்பில் உள்ளேன்.
அதிகாரிகள் விசாரணை
சி.பி.ஐ. அரசியல் அமைப்பு சட்டத்தின்படி செயல்படுகிறது. அந்த அமைப்பில் டி.கே.சிவக்குமார் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அது தொடர்பாக அந்த அமைப்பின் அதிகாரிகள் விசாரணை நடத்துவார்கள். இது டி.கே.சிவக்குமாருக்கும் தெரியும். ஹலால் இறைச்சி சான்றிதழுக்கு தடை விதிக்கும் தனிநபர் மசோதாவுக்கும், அரசுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.
இவ்வாறு பசவராஜ் பொம்மை கூறினார்.