நவீன காலத்திலும் பிரசவத்தின்போது கர்ப்பிணிகள் இறப்பது அவமானம்; சுகாதாரத்துறை மந்திரி சுதாகர் பேச்சு

நவீன காலத்திலும் பிரசவத்தின்போது கர்ப்பிணி பெண்கள் இறப்பது அவமானம் என்று சுகாதாரத்துறை மந்திரி சுதாகர் கூறியுள்ளார்.
நவீன காலத்திலும் பிரசவத்தின்போது கர்ப்பிணிகள் இறப்பது அவமானம்; சுகாதாரத்துறை மந்திரி சுதாகர் பேச்சு
Published on

பெங்களூரு:

சுயபரிசோதனை

சுகாதாரத்துறை சார்பில் ஊட்டச்சத்து குறைபாடு குறித்த கருத்தரங்கு பெங்களூருவில் நேற்று நடைபெற்றது. இதில் சுகாதாரத்துறை மந்திரி சுதாகர் கலந்து கொண்டு பேசியதாவது:-

கர்நாடகத்தில் ஆஷா, அங்கன்வாடி ஊழியர்கள் சுகாதாரம், கிராம பஞ்சாயத்து துறையுடன் இணைந்து குழந்தைகளின் உடல் நிலையை பரிசோதிக்கும் பணியை மேற்கொள்ள வேண்டும். சுகாதாரத்துறை இந்த பணியை செய்துள்ளது. ஆனால் நாம் சுயபரிசோதனை செய்து கொண்டால், இந்த பணியை நாம் முழுமையாக செய்யவில்லை என்றே கூற வேண்டும்.

மருத்துவ பரிசோதனை

ஆரம்ப சுகாதார நிலையங்களில் பணியாற்றும் டாக்டர்கள் தங்கள் பகுதியில் உள்ள அரசு பள்ளிகளுக்கு சென்று குழந்தைகளின் உடல்நிலையை பரிசோதிக்க வேண்டும் அல்லது குழந்தைகள் ஆஸ்பத்திரிக்கு நேரில் வந்து மருத்துவ பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். இதற்காக உரிய நடவடிக்கையை பள்ளி கல்வித்துறை எடுக்க வேண்டும்.

இந்த நவீன காலத்திலும் பிரசவத்தின்போது கர்ப்பிணி பெண்கள் உயிரிழப்பது என்பது அவமானகரமான விஷயம். கர்நாடகத்தில் பெண்கள் ஆண்டுக்கு ஒரு முறையாவது மருத்துவ பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். கோவிலுக்கு சென்று பூஜை செய்வது நமது கலாசாரத்தின் ஒரு பகுதி. அதே போல் மருத்துவ பரிசோதனை செய்து கொள்வதையும் ஒரு பணியாக பெண்கள் கருத வேண்டும்.

சுகாதார சேவை

சுகாதாரத்துறையில் அமல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்து மக்களிடையே அதிகளவில் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். கர்நாடக சுகாதாரத்துறையில் நல்ல சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. சிறப்பான சுகாதார சேவை வழங்கும் பட்டியலில் கர்நாடகம் நல்ல முன்னேற்றத்தை கண்டுள்ளது. ஆனால் ஊட்டச்சத்து குறைபாடு மற்றும் அனிமியா போன்ற பிரச்சினைகள் இருக்கிறது. இவற்றை போக்க நாம் இன்னும் சிறப்பாக பணியாற்ற வேண்டியுள்ளது.

இந்த பிரச்சினையை தீர்க்க எங்கள் அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்துகிறது. குழந்தை பிறந்த 2 ஆண்டுகளில் ஊட்டச்சத்து குறைபாடு ஏற்கிறது. இதனால் குழந்தைகளின் உடல் வளர்ச்சியில் பிரச்சினைகள் ஏற்படுகின்றன. அதனால் குழந்தை பிறந்த 1,000 நாட்களில் ஊட்டச்சத்து குறைபாடு ஏற்படாமல் பார்த்து கொள்ள வேண்டும். பெண் குழந்தைகளுக்கு இந்த ஊட்டச்சத்து குறைபாடு ஏற்பட்டால், அவள் வளர்ந்து ஆளாகி குழந்தை பெற்றெடுக்கும்போது, அந்த குழந்தை குறை பிரசவத்தில் பிறக்கும் நிலை உள்ளது.

உள்கட்டமைப்புகள்

பட்ஜெட்டில் சுகாதாரத்துறைக்கு 8 சதவீதம் ஒதுக்க வேண்டும் என்று மருத்துவ நிபுணர்கள் கூறுகிறார்கள். தற்போது 5 சதவீதம் மட்டும் ஒதுக்கப்பட்டுள்ளது. கொரோனா பரவல் காரணமாக சுகாதாரத்துறைக்கு கடந்த 2 ஆண்டுகளில் அதிகளவில் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. மருத்துவ உள்கட்டமைப்பு வசதிகளை 5 மடங்கு அதிகரித்துள்ளோம். கர்நாடகத்தில் 6 ஆயிரம் சகாதார மையங்களை நல மையங்கமாக தரம் உயர்த்த மத்திய அரசு இலக்கு நிர்ணயித்தது. நாங்கள் இதுவரை 8 ஆயிரத்து 250 நல மையங்களை அமைத்துள்ளோம். இந்திரா தனூஷ் தடுப்பூசி 100 சதவீதம் போடப்பட வேண்டும்.

இவ்வாறு சுதாகர் பேசினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com