

பெட்ரோல் மற்றும் டீசல் ஏற்றுமதி மீதான வரிகளை மத்திய அரசு மாற்றியமைத்துள்ளது. அதன்படி பெட்ரோல் ஏற்றுமதி மீதான வரியை லிட்டருக்கு ரூ.0.50 லிருந்து ரூ.2.50ஆக உயர்த்தியும், டீசல் மீதான வரியை ரூ.16 லிருந்து ரூ.8.50 ஆகக் குறைத்தும் மத்திய நிதியமைச்சகம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த புதிய மாற்றங்கள் இன்று (வெள்ளிக்கிழமை) முதல் நடைமுறைக்கு வந்துள்ளன.
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் மற்றும் பெட்ரோலியப் பொருட்களின் விலைகளில் ஏற்படும் மாற்றங்களுக்கு ஏற்ப, அரசு ஒவ்வொரு 15 நாட்களுக்கும் ஏற்றுமதி வரிகளை மறு ஆய்வு செய்கிறது. சர்வதேச எண்ணெய் விலைகளில் ஏற்படும் ஏற்ற இறக்கங்கள் மற்றும் புவிசார் அரசியல் பதற்றங்களை அடுத்து, சமீப மாதங்களில் இந்த வரி பல முறை மாற்றப்பட்டுள்ளது.
கடந்த செப்டம்பர் மாதம், பெட்ரோல் ஏற்றுமதி மீதான வரி லிட்டருக்கு ரூ.0.50 ஆகக் குறைக்கப்பட்டிருந்தது, தற்போது அது ரூ.2.50 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. அதேபோல், கடந்த மாதங்களில் படிப்படியாகக் குறைக்கப்பட்ட டீசல் ஏற்றுமதி மீதான வரி, தற்போதைய மறுஆய்வில் மேலும் குறைக்கப்பட்டு ரூ.8.50 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.