நீட் தேர்வுக்கான கட்டணம் செலுத்த கால அவகாசம் நீட்டிப்பு

நீட் தேர்வுக்கான கட்டணத்தை செலுத்துவதற்கு கால அவகாசத்தை நீட்டித்து அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
நீட் தேர்வுக்கான கட்டணம் செலுத்த கால அவகாசம் நீட்டிப்பு
Published on

புதுடெல்லி,

இளங்கலை மருத்துவ நுழைவுத் தேர்வான நீட் 2021 தேர்வுக்கான விண்ணப்பக் கட்டணம் செலுத்துவதற்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளதாக என்டிஏ அறிவித்துள்ளது.

எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ்., சித்தா, ஆயுர்வேதா, யுனானி, ஹோமியோபதி உட்பட இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கும், பி.எஸ்.சி. நர்சிங் படிப்புக்கும் தேசியத் தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு (நீட்) அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடத்தப்படுகிறது. ஆண்டுதோறும் மே முதல் வாரத்தில் தேசியத் தேர்வுகள் முகமை (என்.டி.ஏ.) சார்பில் இந்தத் தேர்வு நடத்தப்படுகிறது.

கொரோனா பரவலால் இந்த ஆண்டு ஆகஸ்ட் 1 ஆம் தேதி நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்த நீட் நுழைவுத் தேர்வு ஒத்திவைக்கப்பட்டது. பின்னர், செப்டம்பர் 12 ஆம் தேதி கொரோனா விதிமுறைகளைப் பின்பற்றி நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

இதற்கான விண்ணப்பப் பதிவு https://ntaneet.nic.in/ என்ற இணையதளத்தில் ஜூலை 13 ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 10 ஆம் தேதி வரை நடைபெற்று வந்தது. அதேபோல நீட் தேர்வு விண்ணப்பங்களில் திருத்தங்கள் செய்ய ஆகஸ்ட் 11 ஆம் தேதி முதல் 14ம் தேதி(இன்று) மதியம் 2 மணி வரை அவகாசம் வழங்கப்பட்டது.

இந்நிலையில், ஏற்கெனவே விண்ணப்பித்த மாணவர்கள் கட்டணத்தை செலுத்தக் கால அவகாசம் ஆகஸ்ட் 15ம் தேதி(நாளை) இரவு 11.50 மணி வரை நீட்டிக்கப்படும் என்று என்.டி.ஏ. அறிவித்துள்ளது. இதுகுறித்து என்.டி.ஏ. இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில், மாணவர் சமுதாயத்தின் தொடர்ச்சியான கோரிக்கைகளை ஏற்று விண்ணப்பக் கட்டணத்தைச் செலுத்தக் கால அவகாசம் நாளை (15ம் தேதி) இரவு 11.50 மணி வரை நீட்டிக்கப்படும். ஏற்கெனவே நீட் 2021 தேர்வுக்கு விண்ணப்பித்து, கட்டணத்தை செலுத்த முடியாத மாணவர்களுக்கு மட்டுமே இந்த அறிவிப்பு பொருந்தும். சம்பந்தப்பட்ட விண்ணப்பதாரர்கள் இந்த கடைசி வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இனி, மீண்டும் வாய்ப்பு வழங்கப்பட மாட்டாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com