

பிப்ரவரி 14-ம் தேதி பாகிஸ்தான் ஆதரவுப்பெற்ற ஜெய்ஷ் இ முகமது பயங்கரவாத இயக்கம் புல்வாமாவில் தாக்குதல் நடத்தியது. ஜெய்ஷ் இ முகமது பயங்கரவாத இயக்கம் நடத்திய தற்கொலைப்படை கார் வெடிகுண்டு தாக்குதலில் சிஆர்பிஎப் வீரர்கள் பலியாகினர். இதனையடுத்து பயங்கரவாதம் விவகாரத்தில் நடவடிக்கை எடுக்காத பாகிஸ்தானுக்கு பதிலடியை கொடுக்கும் வகையில் கடந்த செவ்வாய்க்கிழமை அதிகாலையில் இந்திய விமானப்படைகள் எல்லைத் தாண்டி சென்று பயங்கரவாத முகாம்களை அழித்தது. இதனையடுத்து புதன்கிழமை இந்திய எல்லைக்குள் பாகிஸ்தான் விமானப்படைகள் அத்துமீறியது. அவைகளை இந்திய விமானப்படை விரட்டியது.
இதில் இந்திய விமானி அபிநந்தன் பாகிஸ்தானிடம் சிக்கிக்கொண்டார். அவரை நாளை விடுவிப்பதாக பாகிஸ்தான் அறிவித்துள்ளது.
இதற்கிடையே இந்தியா, பாகிஸ்தானில் பல போலி செய்திகள் வைரலாகியது. போலி செய்திகளில் பாகிஸ்தான் அரசு நிர்வாகம், ஊடகங்கள் மற்றும் சமூக வலைத்தள பயனாளிகள் சிக்கியுள்ளனர். அவர்கள் போலி செய்திகளை உண்மையென்று பிறருக்கு பகிர்ந்து வந்துள்ளனர். எல்லையில் இருந்த பதட்டத்தைவிடவும் டுவிட்டர், பேஸ்புக், வாட்ஸ் அப்பில் பதட்டம் அதிகமாகவே காணப்பட்டது. பழைய செய்திகள், புகைப்படங்கள் அனைத்தும் பீதியை கிளப்பும் வகையில் வெவ்வேறு பாணியில் வெளியாகியது. சமூக வலைத்தளங்கள் எவ்வளவு மோசமான பயன்படுத்தப்பட்டது என்பதற்கு இது உதாரணமாகும்.
மறுபுறம் இந்தியா - பாகிஸ்தான் இடையிலான பதட்டத்தை தணிக்கவும் இதே சமூக வலைதளங்கள் உதவியது. தவறாக பயன்படுத்தியவர்களைவிட ஆக்கப்பூர்வமாக பயன்படுத்தியவர்கள் இவ்விவகாரத்தில் அதிகமாகும். ''இந்தப் போர் தீவிரவாதத்துக்கு எதிரானது. இரண்டு தேசங்களுக்கு இடையேயானது அல்ல, என பிரபலங்கள் முதல் மக்கள் வரையில் பகிர்ந்தனர். அபினந்தனை மீட்க வேண்டும் என்கிற குரல் இந்தியாவைத் தாண்டி உலகம் முழுவதும் எதிரொலிக்கத் தொடங்கியது.
அபினந்தன் பத்திரமாக மீட்கப்படவேண்டும், அவர் கவுரவமாக நடத்தப்படவேண்டும் என்ற குரல் பாகிஸ்தானிலும் எழுப்பப்பட்டது. #Abhinandan, #SayNoToWar, #SaveAbinandhan #BringBackAbhinandan போன்ற ஹேஷ்டேக்குகள் ஆக்கப்பூர்வமாக பயன்படுத்தப்பட்டது. போலியாக பரப்பப்பட்ட செய்திகளை பார்க்கலாம்...
பாகிஸ்தானில் பரவிய விமான பாகங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டதா?
* இந்திய விமானப்படை விமானங்கள் இரண்டை சுட்டு வீழ்த்தியதாக பாகிஸ்தான் அறிவித்தது. இதனையடுத்து இரு விமான பாகங்களுடன் பாகிஸ்தான் ஊடகங்கள், அரசு முகமைகள் மற்றும் சமூக வலைதள பயனாளர்கள் பக்கத்தில் செய்திகள் வெளியாகியது. இந்த இரண்டு விமானங்களின் பாகங்களில் இடம்பெற்று இருந்த எண் TU657 மற்றும் A3492 ஆகும். TU657 எண் கொண்ட இந்திய விமானப்படையின் மிக் 27 விமானம் 2016-ம் ஆண்டு ஜூன் மாதம் 13-ம் தேதி ராஜஸ்தானின் ஜோத்பூரில் விபத்தில் சிக்கியது. A3492 எண் கொண்ட விமானம் ஒடிசாவில் 2015-ம் ஆண்டு விபத்துக்குள் சிக்கியது.
* இதேபோன்று பாகிஸ்தான் ஊடகங்கள், சமூக வலைதளங்களில் இந்திய விமானப்படையின் விமானம் சுட்டுவீழ்த்தப்படும் வீடியோவும் வெளியாகியது. இதில் விமானம் ஒன்று தாக்கப்படும் காட்சி இடம் பெற்றது. இது இரண்டு வீடியோக்கள் இணைக்கப்பட்ட பொய்யான வீடியோவாகும். வீடியோவின் முதல்பாகம் பாகிஸ்தான் விமானப்படையின் 2015 வீடியோவாகும், இரண்டாவது வீடியோ ரஷியா டைம்ஸ் வெளியிட்டது. விமானம் சுடப்பட்டதாக கூறப்படுகிறது. ஆனால் அது பயிற்சியின் போது ஆளில்லா டிரோன் ஆகும்.
இந்திய விமானிகள் காயம்
* புதன்கிழமை காலையில் இந்திய விமானங்கள் இரண்டை சுட்டு வீழ்த்தியதாகும், இரு விமானிகளை கைது செய்துள்ளதாகவும் பாகிஸ்தான் தெரிவித்தது. மாலை இதனை ஒன்று என அறிவித்தது. இரு வீடியோக்கள் அப்போது வைரலாகியது. பாகிஸ்தானில் இந்திய விமானிகள் தவிக்கும் காட்சியென பரப்பப்பட்டது. வீடியோ ஒன்று பெங்களூருவில் இந்திய விமானப்படை நிகழ்ச்சியின் போது பிப்ரவரி 19-ம் தேதி சூர்ய கிராண் விமானம் விபத்துக்குள் சிக்கிய போது எடுக்கப்பட்டது.
* மற்றொரு வீடியோ ஒன்று இந்திய விமானியை பாகிஸ்தான் வீரர்கள் தாக்கும் காட்சியென பரப்பப்பட்டது. ஆனால் மற்றொரு வீடியோவில் பாகிஸ்தான் ராணுவம் நல்லமுறையில் நடத்தியது என அபிநந்தன் பேசுகிறார். ஆக்கிரமிப்பு காஷ்மீரில் அவர் விழுந்ததும், உள்ளூர் மக்கள்தான் தாக்கினர். ராணுவம் தாக்கவில்லை என்று தெரிவிக்கப்படுகிறது. ஆனால் இவ்விவகாரத்தில் விமானி இந்தியாவிற்கு திரும்பியதும் தெளிவு கிடைக்கும்.
தாக்குதல் நடத்திய விமானிகள்
இதற்கிடையே தாக்குதல் நடத்திய விமானிகள் என பல்வேறு புகைப்படங்கள் பரவியது. 4 விமானப்படை வீரர்கள் இந்திய விமானப்படை விமானம் பின்னால் நிற்க நெஞ்சை நிமிர்த்தி வருகிறார்கள். இப்புகைப்படம் பல்வேறு செய்திகளுக்கு பிரதிநிதித்துவ புகைப்படங்களாக வைக்கப்பட்டுள்ளது. அவர்கள் தாக்குதல் நடத்தியவர்கள் கிடையாது. இதுபோன்று பல்வேறு போலி புகைப்படங்களுடன் செய்திகள் சமூக வலைதளங்களில் பரவியது.
பெண் விமானிகள் தாக்குதல் நடத்தினரா?
இதேபோன்று இந்திய பெண் விமானிகள் பாகிஸ்தானுக்குள் சென்று தாக்குதல் நடத்தினர் என செய்திகள் பரப்பப்பட்டது. இதுவும் பொய்யானவை என்று தெரியவந்தது. குஜராத்தை சேர்ந்த உர்விஷா ஜரிவாலா என்ற பெண் விமானி அதிரடி தாக்குதலில் ஈடுபட்டார். அவரை பாராட்டுங்கள் என்று புகைப்படம் ஒன்று பரப்பப்பட்டது. இதனை பா.ஜனதாவினரும் பகிர்ந்து உள்ளனர். ஆனால் அப்படியொன்றும் நடக்கவில்லை. புகைப்படம் இந்தியாவின் முதல் விமானப்படை விமானி சினேகா சேகாவாட் என தெரியவந்துள்ளது.
மற்றொரு புகைப்படம் ஐ.எஸ். பயங்கரவாதிகளுக்கு எதிராக போரிட்ட ஐக்கிய அரபு எமிரெட்ஸ் விமானி மரியம் புகைப்படம் ஆகும்.
பூகம்பம் புகைப்படம்
போலி செய்தியின் உச்சமாக ஆக்கிரமிப்பு காஷ்மீரில் 2005-ம் ஆண்டு நிகழ்ந்த பூகம்பத்தில் பலியானவர்களின் உடல்களை காட்டி இது, இந்திய விமானப்படையின் தாக்குதலின் விளைவாக என்று சித்தரிக்க முயற்சி செய்யப்பட்டுள்ளது.
ஐ சப்போர்ட் அமித் ஷா என்ற பேஸ்புக் பக்கத்திலும் இந்த போலி புகைப்படம் பதிவு செய்யப்பட்டுள்ளது. பாகிஸ்தானில் ஏற்பட்ட தாக்கம் என்று 10க்கும் மேற்பட்ட புகைப்படங்கள் வெளியாகியது. இதில் பூகம்பத்தில் இறந்தவர்களின் புகைப்படமும் இடம்பெற்றது. வெளியான பெரும்பாலான புகைப்படங்கள் போலியானவையாகும். விமானப்படை தாக்குதல் நடத்திய முகாம், அதில் இங்கிலாந்து, அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் கொடிகள் பெயிண்ட் செய்யப்பட்டு இருந்தது என வெளியிடப்பட்ட புகைப்படம்தான் உண்மையாகும்.
பேஸ்புக், டுவிட்டர், வாட்ஸ் ஆப் போன்றவற்றில் இது தொடர்பாக பகிரப்படும் புகைப்படங்களில் பல போலியானவை. இந்திய விமானங்கள் தாக்குதல் எனவும் போலியான வீடியோக்கள் வெளியாகியது. முந்தைய வீடியோக்கள் இப்போது நடந்ததாக தெரிவிக்கப்பட்டது. பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தும் போலி செய்திகளும் பரப்பப்பட்டு இருந்தது. இதனுடைய உண்மைத்தன்மை தெரியாமல் பலரால் பகிர்வு செய்யப்பட்டுள்ளது. சமூகவலைத்தளங்களை பயன்படுத்துபவர்கள் உண்மையை உறுதி செய்து ஆக்கப்பூர்வமாக செயல்படுவது நல்லது.