

மும்பை,
மும்பையில், கள்ள நோட்டுகளை அச்சடித்து விநியோகம் செய்யும் மோசடி கும்பலை பற்றி குற்றப்பிரிவு போலீசாருக்கு கிடைத்த குறிப்பிட்ட தகவலின் அடிப்படையில் போலீசார் புறநகரில் உள்ள தஹிசார் சோதனைச் சாவடியில் சோதனை செய்தனர்.
அப்போது ஒரு காரை மறித்து சோதனை செய்தபோது, அதில் ரூ5 கோடி மதிப்புள்ள 205 இரண்டாயிரம் ரூபாய் நோட்டுக்கள் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து, கள்ளநோட்டுக்களை பறிமுதல் செய்த போலீசார், காரில் இருந்த 4 பேரை பிடித்து விசாரித்ததன் பேரில், அவர்களது மேலும் மூன்று உதவியாளர்கள் பற்றிய தகவல் போலீசாருக்கு கிடைத்தது.
அதன்படி, அந்தேரி புறநகர் பகுதியில் உள்ள ஒரு ஹோட்டலில் போலீசார் சோதனை செய்து மூவரையும் கைது செய்ததனர். அவர்களிடம் இருந்த 2 கோடி மதிப்புள்ள கள்ளநோட்டுக்களையும் பறிமுதல் செய்தனர்.
போலீசார் நடத்திய விசாரணையில், அவர்கள் மாநிலங்களுக்கு இடையேயான கள்ள நோட்டுகளை அச்சடித்து விநியோகம் செய்யும் மோசடி கும்பல் என்பது தெரியவந்தது. இந்த வழக்கில் இதுவரை 7 கோடி ரூபாய் மதிப்புள்ள கள்ள நோட்டுகளை பறிமுதல் செய்த போலீசார், 7 பேரை கைது செய்துள்ளனர்.