

லக்னோ,
உத்திரப்பிரதேசம் மாநிலம், ஹர்தோய் மாவட்டத்திலுள்ள பாலி காவல் நிலையப் பகுதிக்குட்பட்ட தலெல்பூர் கிராமத்தச் சேர்ந்தவர் குன்வர் சந்த் (வயது 55) விவசாயி. இவர் மனைவியுடன் நேற்று (வியாழக்கிழமை) மாலை சுமார் 5 மணியளவில் தனது வயலில் உள்ள சுமார் 20 அடி ஆழமுள்ள பழைய உறைகிணற்றின் ஓரமாக இருந்த செங்கற்களை எடுத்துக்கொண்டிருந்தார். அப்போது தீடீரென்று மண் சரிவு ஏற்பட்டது.
இதனால் குன்வர் சந்த் உறைகிணற்றிக்குள் தவறி விழுந்தார். அவர் மீது மேலும் மண் சரிந்தது. இதனால் அவர் மண்ணுக்குள் புதைந்தார். இதனைக் கண்ட அவரது மனைவி கத்திக் கூச்சலிட்டார். இதையடுத்து அவரது குடும்பத்தாரும் கிராம மக்களும் அங்கு விரைந்து வந்தனர். கிராம மக்கள் காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர்.
தகவல் கிடைத்ததும், காவல்துறை அதிகாரி சோம்பால் கங்வார் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். உடனே கிராம மக்கள் மற்றும் ஒரு ஜேசிபி இயந்திரத்தின் உதவியுடன், பக்கவாட்டில் பெரிய பள்ளம் தோண்டி, மீட்பு பணி தொடங்கியது. கிணற்றின் ஆழம் மற்றும் தொடர்ந்து சரிந்து கொண்டிருந்த மண் காரணமாக மீட்புப் பணி மிக்பெரிய சவாலாக இருந்தது.
சுமார் மூன்று மணி நேர கடும் போராட்டத்திற்குப் பிறகு சடலமாக மீட்கப்பட்டார். இது அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.