டெல்லி நோக்கி 2வது நாளாக விவசாயிகள் பேரணி: எல்லையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு; போக்குவரத்து பாதிப்பு

டெல்லியை நோக்கி 2வது நாளாக விவசாயிகள் பேரணி செல்லும் நிலையில் பிற மாநிலங்களில் இருந்து டெல்லிக்கு வரக்கூடிய வாகன போக்குவரத்து பாதிக்கப்பட்டு உள்ளது.
டெல்லி நோக்கி 2வது நாளாக விவசாயிகள் பேரணி: எல்லையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு; போக்குவரத்து பாதிப்பு
Published on

புதுடெல்லி,

விவசாயிகளின் நலன்களுக்காக வேண்டி மத்திய அரசு நிறைவேற்றிய வேளாண் சட்டங்களுக்கு நாடு முழுவதுமுள்ள ஒரு தரப்பு விவசாயிகளிடையே எதிர்ப்பு கிளம்பியது. இதனை தொடர்ந்து அந்த சட்டங்களை திரும்ப வலியுறுத்தி வடமாநில விவசாயிகள் ரெயில் மறியல், பேரணி உள்ளிட்ட போராட்டங்களை நடத்தி வந்தனர்.

இந்த நிலையில், அரியானா மற்றும் பஞ்சாப் மாநில விவசாயிகள் மத்திய அரசை கண்டித்து, சட்டங்களை வாபஸ் பெற வலியுறுத்தி டெல்லி நோக்கி நேற்று காலை டிராக்டரிலும் மற்றும் நடந்தும் பேரணியாக புறப்பட்டு சென்றுள்ளனர்.

இதனை தொடர்ந்து, டெல்லி மற்றும் அரியானா எல்லை பகுதியான சிங்கு எல்லை பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதம் ஏந்திய போலீசாருடன், ஆளில்லா விமானம் வழியேயும் போராட்டக்காரர்களை கண்காணிக்கும் பணி நடைபெற்றது.

போராட்டத்தில் வன்முறை பரவிவிடாமல் தடுப்பதற்காக கலகக்காகரர்களை கலைந்து போக செய்யும் வகையில் டெல்லி போலீசாரின் வஜ்ரா வாகனமும் தயார் நிலையில் வைக்கப்பட்டது. பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படாமல் அந்த வழியே போகும் வாகனங்களை கண்காணித்து அனுப்பும் பணியும் நடந்தது.

இந்நிலையில், அரியானாவின் அம்பாலா பகுதியருகே சம்பு எல்லை பகுதியில் திரண்டு வந்த விவசாயிகளை கலைந்து போக செய்வதற்காக போலீசார் கேட்டு கொண்டனர். ஆனால், அவர்கள் செல்லவில்லை. அதற்கு பதிலாக போலீசார் தடுப்புக்காக போட்டிருந்த தடுப்பான்களை பாலத்தில் இருந்து தூக்கி கீழே போட்டனர்.

இதனை தொடர்ந்து அவர்கள் மீது தண்ணீர் பாய்ச்சி அடிக்கப்பட்டது. இதேபோன்று டெல்லி செல்லும் வழியில் கர்னால் என்ற இடத்தில் விவசாயிகள் குவிந்தனர். அவர்கள் அந்த பகுதி வழியே டிராக்டரில் பேரணியாக செல்ல முயன்றனர். அவர்களை செல்ல விடாமல் சாலையில் தடுப்பான்கள் போடப்பட்டன. இதனால் பொதுமக்களும், அந்த வழியே செல்பவர்களும் பாதிக்கப்பட்டனர்.

இந்த பேரணியில் கலந்து கொண்ட விவசாயிகள் இரவு வந்ததும் பானிபட் சுங்க சாவடியருகே படுத்து உறங்கினர். காலை எழுந்ததும் மீண்டும் 2வது நாளாக தங்களது பேரணியை தொடர்ந்துள்ளனர். இதனை தொடர்ந்து அரியானா மற்றும் டெல்லி இடையேயான சிங்கு எல்லை பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.

போராட்டக்காரர்களை தடுத்து நிறுத்தும் நோக்கில், போலீசார் தடுப்பான்களுடன் சுருள்கம்பிகளை இணைத்து தடுப்புவேலி அமைத்து உள்ளனர்.

இந்த நிலையில், விவசாயிகளின் பேரணி தேசிய நெடுஞ்சாலையில் பானிபட் சுங்க சாவடி அருகே தடுத்து நிறுத்தப்பட்டது. அரியானாவின் சில இடங்களில் தடுப்பான்களை உடைத்து வன்முறையில் ஈடுபட்ட விவசாயிகளை போலீசார் தண்ணீர் பாய்ச்சியும், கண்ணீர் புகைகுண்டுகளை வீசியும் கலைத்தனர்.

இதனால், பிற மாநிலங்களில் இருந்து டெல்லி செல்லும் பயணிகள் பாதிக்கப்பட்டு உள்ளனர். டெல்லியை கடந்து ஜம்மு மற்றும் காஷ்மீர் உள்ளிட்ட வடபகுதிகளுக்கு செல்ல வேண்டியவர்களும் தடுத்து நிறுத்தப்பட்டு தங்களது உடைமைகளுடன் காத்து கிடக்கின்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com