

கொல்கத்தா,
மேற்கு வங்க மாநிலத்தில், 9-ம் வகுப்பு அரையாண்டுத் தேர்வில் நல்ல மதிப்பெண்கள் பெற்ற தனது மகனுக்கு, தொழிலதிபர் ஒருவர் சுமார் 1.62 கோடி ரூபாய் மதிப்புள்ள சொகுசு பி.எம்.டபிள்யூ காரைப் பரிசாக வழங்கியுள்ள சம்பவம் சமூக வலைதளங்களில் பேசுபொருளாகியுள்ளது.
மேற்கு வங்க மாநிலம், புர்பா பர்தமான் மாவட்டத்தில் உள்ள கல்சி பகுதியை அடுத்த பராஜ் கிராமத்தைச் சேர்ந்தவர் ஷம்சுதீன் மித்யா. தொழிலதிபரான இவரது 15 வயது மகன் முகமது தல்ஹா, அப்பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வருகிறார். முன்னதாக, அரையாண்டுத் தேர்வில் நல்ல மதிப்பெண்கள் பெற்றால் ஆடம்பரக் கார் வாங்கித் தருவதாக தனது மகனிடம் ஷம்சுதீன் மித்யா வாக்குறுதி அளித்திருந்தார்.
தேர்வில் மகன் சிறப்பான மதிப்பெண்கள் எடுத்ததைத் தொடர்ந்து, தனது வாக்குறுதியை நிறைவேற்றத் தந்தை முடிவு செய்தார். அதன்படி, மும்பை அந்தேரியில் உள்ள பி.எம்.டபிள்யூ ஷோரூமில் இருந்து சுமார் 1.62 கோடி ரூபாய் மதிப்பிலான 'பிஎம்டபிள்யூ எம்4 போட்டி' (BMW M4 Competition) ரக சொகுசு காரை அவர் வாங்கினார். சிறப்பு கண்டெய்னர் வாகனம் மூலம் மும்பையிலிருந்து கொண்டு வரப்பட்ட அந்த புதிய கார், கடந்த 6-ம் தேதி பராஜ் கிராமத்தை வந்தடைந்தது. கிராம மக்கள் மற்றும் உறவினர்கள் முன்னிலையில் காரின் சாவி மாணவர் முகமது தல்ஹாவிடம் ஒப்படைக்கப்பட்டது.
இதனிடையே, ஓட்டுநர் உரிமம் பெறுவதற்குக் கூட வயது வராத 15 வயது சிறுவனுக்கு, அதிவேகமாக செல்லக்கூடிய சொகுசு காரைப் பரிசளித்திருப்பது குறித்து இணையவாசிகள் மத்தியில் இருவேறு விமர்சனங்கள் எழுந்துள்ளன. மகனின் படிப்பை ஊக்குவித்த தந்தையின் செயலை சிலர் பாராட்டினாலும், சாலைப் பாதுகாப்பு குறித்த கவலைகளையும் பலர் எழுப்பி வருகின்றனர்.