

புதுடெல்லி,
வெளிநாட்டு பங்களிப்புகள் ஒழுங்குமுறை திருத்த மசோதாவை முழுமையாக திரும்ப பெற வேண்டும் என்று சிறுபான்மையினருக்கான கூட்டு நடவடிக்கை மன்றத்தின் தலைவரும், மாநிலங்கவை உறுப்பினருமான மூத்த வழக்கறிஞர் பி.வில்சன் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “வெளிநாட்டு பங்களிப்புகள் ஒழுங்குமுறை (FCRA) திருத்த மசோதாவை முழுமையாக திரும்பப் பெற வேண்டும் என்ற கோரிக்கையை மத்திய அரசு இதுவரை ஏற்றுக்கொள்ளவில்லை என்றாலும், மசோதாவை கூட்டு நாடாளுமன்றக் குழுவிற்கு அனுப்பியிருப்பது ஒரு நேர்மறையான மற்றும் ஆக்கபூர்வமான நடவடிக்கை.
இந்த பரிந்துரை, மசோதாவை நாடாளுமன்றத்தில் விரிவாக ஆய்வு செய்வதற்கும், அனைத்து தரப்பினரிடமும் விரிவான ஆலோசனைகளை மேற்கொள்வதற்கும், நாடு முழுவதும் உள்ள தேவாலயங்கள், தொண்டு நிறுவனங்கள், கல்வி நிறுவனங்கள், சுகாதார நிறுவனங்கள், சட்ட வல்லுநர்கள், சமூக அமைப்புகள் மற்றும் சிறுபான்மை பிரதிநிதிகள் எழுப்பியுள்ள கவலைகளை முழுமையாக பரிசீலிப்பதற்கும் முக்கியமான வாய்ப்பை ஏற்படுத்தியுள்ளது” என்று அவர் கூறினார்.
மேலும் முன்மொழியப்பட்டுள்ள திருத்தங்கள் தொண்டு, கல்வி, சுகாதாரம், மனிதநேய சேவை, சமூக சேவை மற்றும் மதப் பணிகளில் ஈடுபட்டுள்ள நிறுவனங்களுக்கு தீவிரமான தாக்கங்களை ஏற்படுத்தக்கூடும் என்பதால், ஆரம்பம் முதலே மசோதாவைத் திரும்பப் பெற வேண்டும் என்று கோரியதாகவும், மாற்று வழியாக தங்களுடைய கருத்துகள், கவலைகள் மற்றும் பரிந்துரைகளை நாடாளுமன்றத்தின் முன் வைக்க வாய்ப்பு ஏற்படும் வகையில், மசோதாவை கூட்டு நாடாளுமன்றக் குழுவிற்கு அனுப்ப வேண்டும் என்றும் வலியுறுத்தியதாக பி.வில்சன் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த பல மாதங்களாக தங்களது அமைப்பு மேற்கொண்ட பிரச்சாரம் அமைதியானதாகவும், ஜனநாயக ரீதியானதாகவும், அரசியலமைப்புச் சட்டத்திற்கு உட்பட்டதாகவும், தொடர்ச்சியானதாகவும் இருந்து வந்துள்ளதாக கூறியுள்ள அவர்,கடந்த ஏப்ரல் மாதம், அப்போதைய தமிழக முதல்-அமைச்சரும் திமுக தலைவருமான மு.க. ஸ்டாலின், மசோதவை உடனடியாகத் திரும்பப் பெறுமாறு பிரதமருக்கு கடிதம் எழுதியதாகவும், ஏப்ரல் 16ம்தேதி தனது தலைமையில் டெல்லி அரசியலமைப்பு கிளப்பில் முக்கியமான தேசிய ஆலோசனைக் கூட்டத்தை நடத்தியதை சுட்டிக்காட்டியுள்ளார்.
தொடர்ந்து கூட்டு நடவடிக்கை மன்றம், தேசிய இணையவழி ஆலோசனைக் கூட்டத்தை நடத்தியதில், நாடு முழுவதிலுமிருந்து 150-க்கும் மேற்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள், திருச்சபைத் தலைவர்கள், சட்ட வல்லுநர்கள் மற்றும் கிறிஸ்தவ அமைப்புகளின் பிரதிநிதிகள் பங்கேற்றதை குறிப்பிட்டுள்ளார்.
தொடர்ந்து ஜூன் 17 ம்தேதி முக்கியமான தேசியத் தலைவர்கள் ஆலோசனைக் கூட்டத்தை நடத்தியதில், சுமார் 100-க்கும் மேற்பட்ட தலைவர்கள் பங்கேற்றதையும் தெரிவித்துள்ள அமைப்பின் தலைவர் பி.வில்சன், சிறுபான்மையினருக்கான கூட்டு நடவடிக்கை மன்றத்தின் அழைப்பை ஏற்று, ஜூன் 28 ம்தேதி இந்தியா முழுவதும் உள்ள தேவாலயங்கள், கிறிஸ்தவ குடும்பங்கள், மிஷன் அமைப்புகள் தேசிய பிரார்த்தனை மற்றும் உண்ணாநோன்பை கடைபிடித்தாகவும், ஜூலை3 அன்று JAFM நாடு தழுவிய தேசிய எதிர்ப்பு தினத்தை நடத்தியதாகவும், நாடு முழுவதும் அமைதியான ஆர்ப்பாட்டங்கள், கையெழுத்து சேகரிப்பு இயக்கங்கள் மற்றும் மனுக்கள் சமர்ப்பிக்கும் நிகழ்வுகள் நடைபெற்று பிரதமருக்கு அனுப்புவதற்காக மனுக்கள் சமர்ப்பிக்கப்பட்டதாக குறிப்பிட்டுள்ளார்.
ஜூலை 20ம்தேதி அன்று, புதுடெல்லியில் உள்ள இந்தியா சர்வதேச மையத்தில் ஒரு முக்கியமான தேசிய ஆலோசனைக் கூட்டத்தை நடத்தியதில் 100-க்கும் மேற்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள், திருச்சபைத் தலைவர்கள், சுகாதாரத் துறை வல்லுநர்கள், கல்வியாளர்கள், சமூக அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் கிறிஸ்தவ அமைப்புகளின் தலைவர்கள் பங்கேற்றதாக பட்டியலிட்டுள்ளார்.
தொடர்ந்து ஆகஸ்ட் 6ம் தேதி தனது தலைமையில் இந்தியாவில் உள்ள பல்வேறு கிறிஸ்தவப் பிரிவுகளைச் சேர்ந்த மதத் தலைவர்கள், அரசு சாரா நிறுவனங்கள், சுகாதார மற்றும் தொண்டு நிறுவனங்களின் பிரதிநிதிகள் அடங்கிய ஒரு குழு மத்திய உள்துறை அமைச்சரை அமித்ஷாவை சந்தித்து, திருத்த சட்டத்தால், பாதிக்கப்படும் கிறிஸ்தவ சமூகத்தினர் மற்றும் நிறுவனங்களின் கவலைகளை இக்குழு உள்துறை அமைச்சரிடம் விரிவாக எடுத்துரைத்தாகவும், மத்திய உள்துறை அமைச்சருடனான சந்திப்பைத் தொடர்ந்து, கிறிஸ்தவ சமூகத் தலைவர்களுடன் இணைந்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலினைச் சந்தித்து, கிறிஸ்தவ சமூகத்தினருக்கும், சிறுபான்மையினருக்கும் தொடர்ந்து ஆதரவாக குரல் கொடுத்து வருவதற்கும், தொடர்ந்து ஆதரவு அளித்து வருவதற்கும் குழு நன்றி தெரிவித்தாக கூறியுள்ளார்.
மசோதாவை முழுமையாகத் திரும்பப் பெற வேண்டும் என்ற தங்களது பிரதான கோரிக்கையில் கூட்டு நடவடிக்கை மன்றம் உறுதியாக உள்ளது. அதேவேளையில், மசோதா நாடளுமன்ற கூட்டு நடவடிக்கைக்குழுவிற்கு அனுப்பப்பட்டிருப்பதை ஒரு நேர்மறையான நடவடிக்கையாக கருதுவதாகவும், இந்த கடினமான மாதங்களில் தங்களுடன் நின்ற ஒவ்வொரு தலைவருக்கும், அரசியல் கட்சிகளுக்கும் , நிறுவனத்திற்கும், தனிநபருக்கும் என அனைவருக்கும் தனது ஆழ்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்தவாகவும் பி.வில்சன் தெரிவித்துள்ளார்.