கொரோனா பரவுவதை தடுக்க மத்திய அரசு தவறிவிட்டது: ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் விசாரணை கமிஷன் - சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு`

கொரோனா நோய் தொற்று பரவுவதை தடுக்க மத்திய அரசு தவறிவிட்டது. இதுபற்றி விசாரிக்க ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் விசாரணை கமிஷன் அமைக்க வலியுறுத்தி சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
கொரோனா பரவுவதை தடுக்க மத்திய அரசு தவறிவிட்டது: ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் விசாரணை கமிஷன் - சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு`
Published on

புதுடெல்லி,

கொரோனா நோய் தொற்று பரவுவதை தடுக்க மத்திய அரசு தவறிவிட்டது. இதுபற்றி விசாரிக்க ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் விசாரணை கமிஷன் அமைக்க வலியுறுத்தி சுப்ரீம் கோர்ட்டில் ஓய்வுபெற்ற சில அதிகாரிகள் மனு தாக்கல் செய்துள்ளனர்.

இந்தியாவில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. கொரோனா தொற்றுநோயை திறம்பட நிர்வகிக்க மத்திய அரசு தவறிவிட்டது. அதுபற்றி விசாரணை நடத்த ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் விசாரணை கமிஷன் அமைக்க வேண்டும் என வலியுறுத்தி சுப்ரீம் கோர்ட்டில் ஓய்வுபெற்ற சில அதிகாரிகள் தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டு உள்ளது.

அந்த மனுவில் கூறப்பட்டு இருப்பதாவது:-

கொரோனா தொற்றுநோய் மக்களின் வாழ்வாதாரத்தில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. மார்ச் மாதம் 24-ந் தேதி அறிவிக்கப்பட்ட ஊரடங்கு தன்னிச்சையானது. பகுத்தறிவற்றது. நிபுணர்களுடனோ அல்லது மாநில அரசுகளுடனோ சரியான ஆலோசனை இன்றி அறிவிக்கப்பட்டது.

இந்த ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்பட்ட விதம் வேலைகள், வாழ்வாதாரம், ஒட்டுமொத்த பொருளாதாரம் ஆகியவற்றில் பேரழிவை தரக்கூடிய தாக்கத்தை ஏற்படுத்திவிட்டது.

ஊரடங்கில் மிகக்கடுமையான தடைகள் இருந்தபோதிலும் அது நோய் பரவுவதை தடுக்க தவறிவிட்டது. நகரங்களில் இருந்து கிராமங்களுக்கு புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு பேரிடர் மேலாண்மை சட்டம் 2005-ன் கீழ் குறைந்தபட்ச நிவாரணம்கூட வழங்கப்படவில்லை.

அது தொடர்பான திட்டங்களை வகுப்பதிலும், வழிகாட்டுதலை வெளியிடுவதிலும் மத்திய அரசு தவறிவிட்டது. சுகாதார பணியாளர்களுக்கு தனிப்பட்ட பாதுகாப்பு உபகரணங்கள் போதுமான அளவு வழங்கப்படுவதை உறுதி செய்வதிலும் தாமதம் ஏற்பட்டது.

இந்த ஆண்டின் ஜனவரி மாத தொடக்கத்தில் உலக சுகாதார மையம் அறிவித்த பிறகும் வைரஸ் பரவுவதை கட்டுப்படுத்த பயனுள்ள நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு மத்திய அரசு தவறிவிட்டது. ஜனவரி, பிப்ரவரி மற்றும் மார்ச் மாதத்தின் தொடக்கத்தில் பன்னாட்டு பயணிகளை கண்காணிக்க அதிகாரிகள் தவறிவிட்டனர்.

இந்த குறைபாடுகள் அனைத்தும் தொற்றுநோயை கையாளும்போது மக்களின் அடிப்படை உரிமைகளை மீறுவதாக அமைந்தன. எனவே தொற்றுநோயை கையாண்டதில் உள்ள தவறான நிர்வாகம் பற்றி விசாரிக்க ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் விசாரணை கமிஷன் அமைக்க மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும். இந்த விசாரணை கமிஷன் சுதந்திரமான விசாரணையை நடத்தவேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.

இந்த மனு மீதான விசாரணை சுப்ரீம் கோர்ட்டில் நீதிபதி எல்.நாகேஸ்வரராவ் தலைமையிலான காணொலி அமர்வில் நாளை (வெள்ளிக்கிழமை) நடைபெற உள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com