நடுக்கடலில் அமைந்துள்ள ஓ.என்.ஜி.சி. எண்ணெய் கிணற்றில் தீ- 10 ஊழியர்கள் காயம்

தற்போது நிலைமை முற்றிலும் கட்டுக்குள் இருப்ப தாகவும், அச்சப்படும் வகையில் அவசர நிலை எதுவும் இல்லை என்றும் அந்த நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது
நடுக்கடலில் அமைந்துள்ள ஓ.என்.ஜி.சி. எண்ணெய் கிணற்றில் தீ- 10 ஊழியர்கள் காயம்
Published on

மும்பை கடற்கரையில் இருந்து சுமார் 99 மைல் தொலைவில் அரபிக்கடலில் ஓ.என்.ஜி.சி. நிறுவனத்தின் எண்ணெய் கிணறு அமைந்துள்ளது. இங்கு எண்ணெய் மற்றும் எரிவாயு எடுக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இங்கு நேற்று முன்தினம் மாலை 5.30 மணி அளவில் திடீரென தீப்பிடித்தது. கரும்புகை சூழ்ந்ததால் அங்கிருந்த ஊழியர்கள் அலறியடித்து ஓடினர்.

தகவல் அறிந்ததும் அங்கு பணியில் இருந்த பாதுகாப்பு ஊழியர்கள் உடனடியாக களத்தில் இறங்கினர். நவீன கருவிகள் மூலம் தீயை அணைக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டனர். சில நிமிடங்களிலேயே தீ முழுமையாக அணைக்கப்பட்டது. இதனால் பெரும் விபத்து மற்றும் உயிர்ச்சேதம் தவிர்க்கப்பட்டது.

இருப்பினும், இந்த தீ விபத்தில் சிக்கி அங்கிருந்த 10 ஊழியர்களுக்கு லேசான தீக்காயங்கள் ஏற்பட்டன. அவர்களுக்கு அங்கேயே முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் மேல்சிகிச்சைக்காக ஹெலிகாப்டர் மூலம் அவர்கள் மும்பைக்கு அழைத்து வரப்பட்டனர்.

இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த கடலோர காவல்படையினர், ஓ.என்.ஜி.சி. அதிகாரிகளை தொடர்பு கொண்டு விசாரணை நடத்தினர். தற்போது நிலைமை முற்றிலும் கட்டுக்குள் இருப்பதாகவும், அச்சப்படும் வகையில் அவசர நிலை எதுவும் இல்லை என்றும் அந்த நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது. இந்த விபத்து குறித்து உயர்மட்ட விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com