

ஹலகூர்,
முத்தத்தி ஆஞ்சநேயசாமி கோவிலுக்கு வந்த ஒரே குடும்பத்தினர் 5 பேர் காவிரி ஆற்றங்கரையில் நின்று செல்போனில் 'செல்பி' புகைப்படம் எடுத்த போது ஆற்றில் தவறி விழுந்து பலியான சோக சமப்வம் நடந்துள்ளது.
பெங்களூரு தெற்கு (ராமநகர்) மாவட்டம் சன்னப்பட்டணா பகுதியைச் சேர்ந்தவர் விஜயம்மா (வயது 50). இவர் தனது குடும்பத்தினர் சைத்ரா(20), சுவேதா(38), பிரியங்கா(28) மற்றும் மகேஷ் ஆகியோருடன் மண்டியா மாவட்டம் மலவள்ளி தாலுகா ஹலகூர் அருகே முத்தத்தி வனப்பகுதியில் காவிரி ஆற்றங்கரையில் உள்ள ஆஞ்சநேயசாமி கோவிலுக்கு நேற்று வந்தார். அங்கு அவர்கள் சாமி தரிசனம் செய்துவிட்டு காவிரி ஆற்றுக்கு சென்றனர். அப்போது அவர்கள் காவிரி ஆற்றின் கரையில் நின்று செல்போனில் 'செல்பி' புகைப்படம் எடுத்துக் கொண்டிருந்தனர்.
அப்போது விஜயம்மா காவிரி ஆற்றில் தவறி விழுந்தார். நீச்சல் தெரியாத அவர் தண்ணீரில் மூழ்கி தத்தளித்தார். அவரை காப்பற்ற ஒருவர் பின் ஒருவராக காவிரி ஆற்றில் குதித்தனர். ஆனால் அவர்களுக்கும் நீச்சல் தெரியாது என்று கூறப்படுகிறது. அவர்களும் நீரில் மூழ்கி தத்தளித்தனர். அதைப்பார்த்த அப்பகுதி பரிசல் ஓட்டுனர்கள் ஆற்றில் குதித்து அவர்களை காப்பற்ற முயன்றனர். ஆனால் அதற்குள் 5 பேரும் பரிதாபமாக நீரில் மூழ்கி பலியானார்கள்.
பின்னர் இதுபற்றி ஹலகூர் போலீசாருக்கும், தீயணைப்பு படையினருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. விரைந்து வந்த தீயணைப்பு படையினரும். போலீசாரும் நீண்ட நேர தேடுதலுக்கு பிறகு காவிரி ஆற்றில் இருந்து 5 பேரின் உடல்களையும் மீட்டனர். பின்னர் 5 பேரின் உடல்களையும் போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மலவள்ளி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுபற்றி போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகிறார்கள். இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.