பஹல்காமை தொடர்ந்து... 50 பயங்கரவாதிகளின் ஊடுருவல் முயற்சி முறியடிப்பு அதிர்ச்சி தகவல் வெளியீடு

பி.எஸ்.எப். படையின் வீராங்கனைகளும், வீரர்களுக்கு உறுதுணையாக நின்று, அனைத்து பணிகளையும் திறம்பட செய்தனர் என மூத்த அதிகாரி கூறியுள்ளார்.
சம்பா,
பஹல்காம் தாக்குதலை தொடர்ந்து ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் பாகிஸ்தானிய பயங்கரவாதிகளை இலக்காக கொண்டு இந்திய அயுத படைகள் பதிலடி தாக்குதலை தொடுத்தன. இதனால், பாகிஸ்தான் மற்றும் இந்தியா இடையே கடந்த 6-ந்தேதி முதல் 4 நாட்களுக்கு போர் பதற்ற சூழல் ஏற்பட்டது. பின்னர் போர் நிறுத்தமும் ஏற்பட்டு இயல்பு நிலை திரும்பியுள்ளது.
இந்நிலையில், ஜம்மு மற்றும் காஷ்மீரின் சம்பா மாவட்டத்தில் கடந்த 8-ந்தேதி எல்லை வழியே, 45 முதல் 50 பயங்கரவாதிகள் ஊடுருவ முயன்றுள்ளனர். அது தடுத்து நிறுத்தப்பட்டு உள்ளது என எல்லை பாதுகாப்பு படையின் (பி.எஸ்.எப்.) மூத்த அதிகாரி ஒருவர் கூறினார்.
இந்த ஊடுருவல் முயற்சிக்கு பின்னணியில் பாகிஸ்தானின் ஆதரவு இருந்துள்ளது என்ற அதிர்ச்சி தகவலும் தெரிய வந்துள்ளது. இதுபற்றி பி.எஸ்.எப்.பின் டி.ஐ.ஜி., எஸ்.எஸ். மாண்ட் கூறும்போது, போர் நிறுத்த விதிமீறலில் ஈடுபட்ட பாகிஸ்தான், எல்லை கடந்து தாக்குதல் என்ற போர்வையில், சர்வதேச எல்லை வழியே பயங்கரவாதிகள் ஊடுருவுவதற்கு உதவியுள்ளது.
ஆனால், நம்முடைய துணிச்சல் மிக்க வீரர்கள் அவர்களுக்கு பலத்த பாதிப்பை ஏற்படுத்தினர். பெரிய அளவில் ஊடுருவல் நடைபெற உள்ளது என நமக்கு முன்பே உளவு தகவல் கிடைத்தது. அதற்கு நாம் தயாராகவே இருந்தோம். அதனை கடந்த 8-ந்தேதி கண்டறிந்தோம் என்றும் கூறியுள்ளார்.
அப்போது, எதிர்பார்த்ததுபோலவே, அவர்கள் கனரக ஆயுதங்களுடன் அவர்களுடைய நிலைகளில் இருந்து தாக்குதல் நடத்தினர். ஆனால், நாம் துல்லிய பதிலடி கொடுத்தோம். ஒன்றரை மணிநேரத்தில் அவர்கள், தங்களுடைய நிலைகளில் இருந்து தப்பியோடி விட்டனர் என்றார்.
இந்த பதிலடியின்போது, நம்முடைய படையின் வீராங்கனைகளும், வீரர்களுக்கு உறுதுணையாக நின்றனர். அனைத்து பணிகளையும் திறம்பட செய்தனர். அவர்களை பார்த்து நாம் பெருமை கொள்கிறோம் என்றார்.






