

போபால்,
மத்திய பிரதேச மாநிலத்தில் நடந்துள்ள நெஞ்சை நொறுக்கும் சம்பவம் இது.
அங்குள்ள அசோக் நகரில் பூஜா ஓஜா (வயது 22) என்ற பெண் கர்ப்பம் தரித்திருந்தார். பாவம், கர்ப்பப்பையிலேயே குழந்தை இறந்து விட்டது. இதனால் மன உளைச்சலில் தவித்து வந்த அவர் கடந்த சில தினங்களுக்கு முன் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
அவரது உடலை பிரேத பரிசோதனைக்கு எடுத்துச்செல்வதற்கு ஒரு ஆம்புலன்ஸ் கூட கிடைக்கவில்லை. குப்பை வண்டியில் ஏற்றிச்சென்றிருக்கிறார்கள்.
இந்த அவலம், அங்குள்ள நாளிதழ்களில் படத்துடன் செய்தியாகி பேசும்பொருளானது.
இது முதல்-மந்திரி கமல்நாத்தின் கவனத்துக்கு சென்றது. இது மனித குலத்தின் மீதான கறை; இதை சகித்துக்கொள்ள முடியாது. இதில் சம்மந்தப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது என அவர் டுவிட்டரில் ஒரு பதிவு வெளியிட்டார்.
இது பற்றி விசாரணை நடத்தப்படும்; தொடர்புடையவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என கூடுதல் கலெக்டர் அனுஜ் ரோத்தகி அறிவித்தார்.
ஆனால் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு சுனில் சிவ்ஹரே, உடல்களை ஏற்றிச்செல்வதற்கு பயன்படுத்தப்படுகிற குப்பை வண்டி இப்போது குப்பைகளை எடுத்துச்செல்வதற்கு பயன்படுத்தப்படுவதில்லை என்று பூசி மெழுகி இருக்கிறார்.