

அமராவதி:
ஆந்திர பிரதேசத்தின் முன்னாள் துணை முதல்-மந்திரியும், முன்னாள் சுகாதாரத்துறை மந்திரியுமான அல்லா கிருஷ்ணா சீனிவாஸ் என்கிற அல்லா நானி மாரடைப்பால் உயிரிழந்தார். அவருக்கு வயது 56. அவரது திடீர் மறைவுக்கு ஆந்திர முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
தெலுங்கு தேச கட்சியின் செயல் தலைவரும், தகவல் தொழில்நுட்பத்துறை மந்திரியுமான நாரா லோகேஷும் அல்லா நானியின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்தார். அனைவருடனும் அன்பாக பழகியவர் என்றும், சர்ச்சைகளில் இருந்து விலகி இருந்தவர் என்றும் தனது இரங்கல் செய்தியில் குறிப்பிட்டுள்ளார். அல்லா நானி, முந்தைய ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் ஆட்சியில் துணை முதல்-மந்திரியாகவும், சுகாதாரத்துறை மந்திரியாகவும் பதவி வகித்தார்.
2024-ம் ஆண்டு ஆந்திர பிரதேச சட்டசபை தேர்தலில் ஏலூரு தொகுதியில் தெலுங்கு தேச கட்சி வேட்பாளர் பி. ராதாகிருஷ்ணய்யாவிடம் தோல்வியடைந்தார். இதைத்தொடர்ந்து ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி தெலுங்கு தேச கட்சியில் இணைந்தார். அல்லா நானியின் மறைவு ஆந்திர அரசியல் வட்டாரத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.