ஜார்க்கண்ட் முன்னாள் முதல் மந்திரி சிபு சோரன் மறைவு: பிரதமர் மோடி நேரில் அஞ்சலி

சிபுசோரன் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து பாராளுமன்ற மேல்சபை இன்று நாள் முழுவதும் ஒத்தி வைக்கப்பட்டது.
புதுடெல்லி,
ஜார்க்கண்ட் மாநிலத்தின் முன்னாள் முதல் மந்திரியும், மாநிலங்களவை எம்.பி.யுமான சிபு சோரன் காலமானார். ஜார்க்கண்ட் மாநிலத்தில் 2005, 2008-2009, 2009-2010 ஆண்டுகளில் மூன்று முறை முதல் மந்திரியாக பணியாற்றியுள்ளார். மூன்று முறை மத்திய அமைச்சராகவும் பணியாற்றியுள்ளார். சிபு சோரன் மீது பல்வேறு ஊழல் வழக்குகள் எழுந்தன. இதனால் இவரது அரசியல் வாழ்க்கையில் பாதிப்பு ஏற்பட்டது. இதையடுத்து, இவர் தனது மகன் ஹேமந்த் சோரனை அரசியலில் வாரிசாக அறிவித்துவிட்டு ஓய்வு எடுத்தார்.கடந்த சில மாதங்களாக அவர் வயது மூப்பு மற்றும் சிறுநீரகக் கோளாறு காரணமாக உடல்நலக் குறைவுடன் இருந்தார். இதற்காக அவர் சிகிச்சை பெற்று வந்தார்.
கடந்த மாதம் அவரது உடல்நிலையில் கடுமையான பின்னடைவு ஏற்பட்டது. இதனால் அவர் டெல்லியில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு செயற்கை சுவாச முறையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இன்று (திங்கட்கிழமை) காலை அவரது உடல்நிலையில் மேலும் பின்னடைவு ஏற்பட்டது. அவரைக் காப்பாற்ற மருத்துவர்கள் குழு தீவிரமாகப் போராடியபோதிலும், சிகிச்சை பலனளிக்காமல் சிபு சோரன் மரணமடைந்தார்.
இதை அவரது மகனும், ஜார்க்கண்ட் முதலமைச்சருமான ஹேமந்த் சோரன் எக்ஸ் வலைதளத்தில் வெளியிட்டு உறுதிப்படுத்தினார்.சிபு சோரனின் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில் பாராளுமன்ற மேல்சபை இன்று நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது. அதுபோல, ஜார்க்கண்ட் மாநிலச் சட்டசபைக் கூட்டமும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. ஜார்க்கண்ட் மாநிலத்தில் மூன்று நாட்களுக்கு அரசு நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டு, துக்கம் அனுசரிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
டெல்லியில் உள்ள அவரது இல்லத்தில் சிபு சோரனின் உடல் வைக்கப்பட்டுள்ளது. அவரது உடலுக்கு பிரதமர் மோடி இன்று நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். அருகில் நின்ற சிபு சோரனின் மகன் ஹேமந்த் சோரனுக்கு பிரதமர் மோடி ஆறுதல் கூறினார்.






