கேரளத்தில் அரசு பஸ்களில் பெண்களுக்கு இலவச பயணம்: தனியார் பஸ் உரிமையாளர்கள் கடும் எதிர்ப்பு

இலவச பயணத்தை கொண்டு வருவதன் மூலம் தனியார் பஸ் தொழில் கடுமையாக பாதிக்கப்படும் என்று உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.
கேரளத்தில் அரசு பஸ்களில் பெண்களுக்கு இலவச பயணம்: தனியார் பஸ் உரிமையாளர்கள் கடும் எதிர்ப்பு
Published on

திருவனந்தபுரம்,

கேரளத்தில் காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி அரசு ஆட்சிக்கு வந்தால் அரசு பஸ்களில் பெண்களுக்கு இலவசமாக பயணம் செய்யலாம் என்று தேர்தல் வாக்குறுதியில் தெரிவிக்கப்பட்டு இருந்தது. அதன்படி நடந்து முடிந்த தேர்தலில் காங்கிரஸ் அதிக இடங்களை பிடித்து வெற்றிபெற்றது.

இந்தநிலையில் நேற்று முன்தினம் வி.டி.சதீசன் தலைமையிலான புதிய அரசு பொறுப்பேற்ற பின்னர் நடைபெற்ற முதல் மந்திரி சபை கூட்டத்திலேயே அரசு பஸ்ககளில் பெண்கள் இலவச பயணத்திற்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதன்படி ஜூன் மாதம் 15-ந் தேதிக்கு பின் இந்த திட்டம் அமலுக்கு வர இருக்கிறது. இந்த திட்டம் குறித்த மற்ற அம்சங்கள் குறித்து விரைவில் அறிவிக்கப்படும் என்றும் முதல்-மந்திரி வி.டி.சதீசன் கூறினார்.

இதற்கிடையே கேரளத்தில் அரசு பஸ்களில் பெண்களுக்கு இலவச பயணத் திட்டத்தை அமல்படுத்துவதற்கு தனியார் பஸ் உரிமையாளர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதுகுறித்து கேரளம் தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்தினர் கூறுகையில், அரசு பஸ்களில் பெண்களுக்கு இலவச பயணத்தை கொண்டு வருவதன் மூலம் மாநிலத்தில் தனியார் பஸ் தொழில் கடுமையாக பாதிக்கப்படும். ஏற்கனவே நாங்கள் கடும் நஷ்டத்தில் தொழில் நடத்தி வருகிறோம்.

உதிரி பாகங்கள் மற்றும் பெட்ரோல், டீசல் விலையும் கடுமையாக உயர்ந்துள்ளது. மேலும், போக்குவரத்து வழித்தட அனுமதி கட்டணம் போன்றவை மிக அதிகமாக உள்ளது. இதை குறைக்கக்கோரி முதல்-மந்திரி மற்றும் போக்குவரத்து துறை மந்திரியை விரைவில் சந்திக்க உள்ளோம். பெண்களுக்கு இலவச பயணம் கொண்டு வருவதற்கு முன் எங்களிடம் அரசு கலந்து ஆலோசிக்கவில்லை என்றனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com