மழை வேண்டி தவளைகளுக்கு திருமணம்.. பெண்கள் நூதன வழிபாடு

ஊரில் நல்ல மழை பெய்ய வேண்டும் என இரண்டு தவளைகளுக்கு கிராம மக்கள் திருமணம் செய்து வைத்தனர்.
image Credits: AI
image Credits: AI
Published on

கோலார் தங்கவயல்,

மழை பொய்த்ததால் குடிநீர் தட்டுப்பாடு

கர்நாடக மாநிலம் சிக்பள்ளாப்பூர் மாவட்டம், சிந்தாமணி தாலுகாவிற்கு உட்பட்ட தபதேஷ்வரா காலனி மற்றும் அதைச் சுற்றியுள்ள கிராமங்களில் கடந்த சில மாதங்களாக போதிய மழை பெய்யாததால் கடும் வறட்சி நிலவி வருகிறது. இதன் காரணமாக நிலத்தடி நீர்மட்டம் வெகுவாக குறைந்து, குடிநீர் தட்டுப்பாடு தீவிரமடைந்துள்ளது.

தண்ணீர் பற்றாக்குறையால் விவசாயப் பணிகள் முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளன. வாழ்வாதாரத்தை இழந்த விவசாயிகள் கவலையில் உள்ளனர். மேலும், குடிநீருக்காக பெண்கள் தினமும் பல கிலோமீட்டர் தூரம் நடந்து சென்று தண்ணீர் எடுத்து வரும் நிலை தொடர்கிறது. மக்களும், கால்நடைகளும் குடிநீருக்காக கடும் சிரமத்தை சந்தித்து வருகின்றனர்.

தவளைகளுக்கு திருமணம் நடத்தி சிறப்பு பிரார்த்தனை

இந்த சூழலில், ஊரில் நல்ல மழை பெய்து வறட்சி நீங்க வேண்டும் என்ற நோக்கில் அப்பகுதி பெண்கள் பாரம்பரிய நம்பிக்கையின்படி இரண்டு தவளைகளை பிடித்து வந்து, அவற்றுக்கு மாலை அணிவித்து மேளதாளத்துடன் திருமண சடங்குகளை நடத்தினர். பின்னர், மழை பெய்ய வேண்டி சிறப்பு வழிபாடும் பிரார்த்தனையும் மேற்கொண்டனர்.

"முன்னோர்கள் கற்றுக்கொடுத்த நம்பிக்கை"

இதுகுறித்து அப்பகுதி பெண்கள் கூறுகையில், "வறட்சி காலங்களில் தவளைகளுக்கு திருமணம் செய்து வைத்தால் மழை பெய்யும் என்பது முன்னோர்களிடம் இருந்து வந்த நம்பிக்கை. தற்போது கடும் தண்ணீர் தட்டுப்பாட்டால் மக்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர். நல்ல மழை பெய்து விவசாயம் செழிக்கவும், குடிநீர் பிரச்சினைக்கு தீர்வு கிடைக்கவும் இந்த வழிபாட்டை நடத்தினோம்" என்று தெரிவித்தனர்.

Image credits: AI
Image credits: AI
X

logo
Daily Thanthi
www.dailythanthi.com