

கர்நாடகத்தில் கடந்த 2023-ம் ஆண்டு காங்கிரஸ் ஆட்சி அமைந்தது. முதல்-மந்திரியாக சித்தராமையா பொறுப்பேற்றார். 2½ ஆண்டுகளுக்கு பிறகு பதவியை டி.கே.சிவக்குமாருக்கு விட்டுக்கொடுக்க வேண்டும் என்று கட்சி மேலிடம் ஒப்பந்தம் போட்டது. சித்தராமையா ஆட்சியில் 3 ஆண்டுகள் நீடித்த நிலையில் கட்சி மேலிட உத்தரவுப்படி சித்தராமையா கடந்த மாதம் (மே) 28-ந் தேதி பதவியை ராஜினாமா செய்தார்.அதைத்தொடர்ந்து 30-ந் தேதி கர்நாடக சட்டசபை காங்கிரஸ் கட்சி கூட்டம் பெங்களூருவில் நடைபெற்றது. இதில் சட்டசபை காங்கிரஸ் குழு தலைவராக டி.கே.சிவக்குமார் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார். அதன் பிறகு டி.கே.சிவக்குமார் கவர்னர் மாளிகைக்கு சென்று கவர்னர் தாவர்சந்த் கெலாட்டை நேரில் சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரினார்.
உடனே கவர்னர், ஆட்சி அமைக்க வருமான டி.கே.சிவக்குமாருக்கு அழைப்பு விடுத்தார். அதைத்தொடர்ந்து டி.கே.சிவக்குமார், தனது தலைமையில் புதிய அரசு 3-ந் தேதி பதவி ஏற்கும் என்று அவர் அறிவித்தார். அதைத்தொடர்ந்து டெல்லிக்கு சென்ற சித்தராமையா, டி.கே.சிவக்குமார் அங்கு அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, ராகுல்காந்தியை சந்தித்து புதிய மந்திரிசபை குறித்து ஆலோசனை நடத்தினர்.
இதில், முதல் கட்டமாக டி.கே.சிவக்குமாருடன் 13 பேர் மந்திரிகளாக பதவி ஏற்பது என்றும், கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான பரமேஸ்வருக்கு துணை முதல்-மந்திரி பதவி வழங்குவதும் என்று தீர்மானிக்கப்பட்டது. புதிய மந்திரிகளின் பட்டியல் இன்று மதியம் வெளியிடப்பட்டது. முதல்-மந்திரி டி.கே.சிவக்குமார், துணை முதல்-மந்திரி பரமேஸ்வர், மந்திரிகள் கே.எச்.முனியப்பா, கே,ஜே.ஜார்ஜ்., எம்.பி.பட்டீல், ராமலிங்கரெட்டி, சதீஸ் ஜார்கிகோளி, கிருஷ்ண பைரேகவுடா, பிரியங்க் கார்கே, யு.டி.காதர், ஈஸ்வர் கன்ட்ரே, யதீந்திரா சித்தராமையா, பைரதி சுரேஷ், சரணபிரகாஷ் பட்டீல் ஆகியோர் பெயர்கள் அறிவிக்கப்பட்டன.
அதைத்தொடர்ந்து சரியாக மாலை 4 மணிக்கு பெங்களூருவில் உள்ள லோக்பவன் கண்ணாடி மாளிகையில் புதிய அரசு பதவி ஏற்பு விழா நடைபெற்றது. முதலில் வந்தே மாதரம், தேசிய கீதம், கன்னடத்தாய் வாழ்த்து பாடல்கள் பாடப்பட்டன. அதைத்தொடர்ந்து சரியாக 4.10 மணிக்கு கர்நாடக முதல்-மந்திரியாக டி.கே.சிவக்குமார் பதவி ஏற்றார். அவருக்கு கவர்னர் தாவர்சந்த் கெலாட் பதவிப்பிரணமாமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார்.
அவரை தொடர்ந்து துணை முதல்-மந்திரியாக பரமேஸ்வர், மந்திரிகளாக கே.எச்.முனியப்பா, கே.ஜே.ஜார்ஜ், எம்.பி.பட்டீல், ராமலிங்கரெட்டி, சதீஸ் ஜார்கிகோளி, கிருஷ்ண பைரேகவுடா, பிரியங்க் கார்கே, யு.டி.காதர், ஈஸ்வர் கன்ட்ரே, யதீந்திரா, பைரதி சுரேஷ், சரணபிரகாஷ் பட்டீல் ஆகியோர் ஏற்றுக் கொண்டனர். அவர்களுக்கு கவர்னர் தாவர்சந்த் கெலாட் அவர்களுக்கு பதவிப்பிரணமாமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார். தற்போது கர்நாடக சட்டசபை சபாநாயகராக உள்ள யு.டி.காதர் மந்திரியாக பதவி ஏற்றுள்ளார்.