

புதுடெல்லி,
டெல்லி கல்காஜி மந்திர் அருகே உள்ள பூங்காவில் 17 வயது சிறுமியை காவலர்கள் என மிரட்டி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில், வாலிபர் ஒருவரை டெல்லி போலீசார் துப்பாக்கி சண்டைக்கு பின் சுட்டுப் பிடித்துள்ளனர்.
டெல்லியைச் சேர்ந்த 17 வயது சிறுமி ஒருவர், நேற்று (திங்கட்கிழமை) மாலை 7 மணியளவில் தனது ஆண் நண்பருடன் டெல்லி கல்காஜி மந்திருக்கு சாமி தரிசனம் செய்ய வந்துள்ளார். தரிசனம் முடிந்து, அவர்கள் இருவரும் அருகில் உள்ள ஆஸ்தா குஞ்ச் பூங்காவில் பேசிக்கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த 3 பேர், தங்களைக் காவலர்கள் என்று கூறி இருவரையும் மிரட்டியுள்ளனர். பின்னர் சிறுமியின் நண்பரைத் தாக்கிவிட்டு, சிறுமியை, அவர்கள் 3 பேரும் சேர்ந்து கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். இச்சம்பவம் குறித்து போலீசாருக்கு இரவு 8:45 மணியளவில் தகவல் தெரிவிக்கப்பட்டது.
பாதிக்கப்பட்ட சிறுமியின் வாக்குமூலத்தின் அடிப்படையில், டெல்லி போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து குற்றவாளிகளை தீவிரமாகத் தேடி வந்தனர். இதில் முக்கிய குற்றவாளியான ஆசிப், அமர் காலனி பகுதியில் உள்ள டி.எம் அலுவலக சாலை அருகே பதுங்கியிருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதையடுத்து இன்று (செவ்வாய்க்கிழமை) அதிகாலை போலீசார் அந்த பகுதிக்கு சென்று ஆசிப்பை சுற்றி வளைத்தனர். அப்போது, தப்பியோட முயன்ற ஆசிப் போலீசாரை நோக்கி 3 முறை துப்பாக்கியால் சுட்டுள்ளார். எனவே போலீசார் தற்காப்புக்காக நடத்திய பதில் தாக்குதலில், ஆசிப்பின் காலில் குண்டு பாய்ந்தது. காயமடைந்த அவரை மீட்ட போலீசார் உடனடியாக ஆஸ்பத்திரியில் அனுமதித்து, தீவிர காவலில் வைத்துள்ளனர்.
இந்த வழக்கில் தொடர்புடைய மற்ற 2 குற்றவாளிகளைப் பிடிக்க டெல்லி போலீசார் தனிப்படைகள் அமைத்து தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர். தலைநகரில் நிகழ்ந்துள்ள இந்த சம்பவம் பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.