பாங்காக்கில் இருந்து விமானங்களில் கடத்திவரப்பட்ட ரூ.2 கோடி மதிப்புள்ள கஞ்சா பறிமுதல்

கைதான 3 பயணிகள் மீதும் விமான நிலைய போலீசார் தனித்தனியாக வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
பறிமுதல்
Published on

தேவனஹள்ளி,

பாங்காக்கில் இருந்து பெங்களூருவுக்கு விமானங்களில் கடத்தி வந்த ரூ.2 கோடி உயர் ரக கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக 3 பயணிகள் கைது செய்யப்பட்டனர்.

சோதனை

பெங்களூரு தேவனஹள்ளியில் உள்ள கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையத்துக்கு வெளிநாடுகளில் இருந்து வரும் விமானங்களில் போதைப் பொருட்கள் கடத்தி வரப்படுவதாக சுங்கத்துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, வெளிநாடுகளில் இருந்து வந்த விமானங்களில் வந்திறங்கிய பயணிகள், அவர்களது உடைமைகளில் அதிகாரிகள் சோதனை நடத்தினர். அப்போது தாய்லாந்து நாட்டின் தலைநகர் பாங்காக்கில் இருந்து வந்த ஒரு விமான பயணிகளிடமும் சோதனை மேற்கொள்ளப்பட்டது.

அப்போது ஒரு பயணியின் நடவடிக்கையில் அதிகாரிகளுக்கு சந்தேகம் எழுந்தது. அவரது உடைமைகள் இருந்த பெட்டிகளில் சோதனை நடத்திய போது உயர் ரக கஞ்சா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து, அந்த பயணி கைது செய்யப்பட்டார். அவரிடம் இருந்து 5 கிலோ 980 கிராம் உயர்ரக கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. அவற்றின் மதிப்பு சர்வதேச சந்தையில் ரூ.2 கோடியே 9 லட்சம் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மற்றொரு விமானத்தில்

இதுபோன்று, பாங்காக்கில் இருந்து வந்த மற்றொரு விமானத்தில் வந்திறங்கிய 2 பயணிகளின் உடைமைகளிலும் உயர்ரக கஞ்சா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அந்த பயணிகள் தங்களுக்கு சொந்தமான பெட்டிகளில் தனியாக அறை அமைத்து உயர்ரக கஞ்சாவை கடத்தி வந்திருந்தனர். அவர்களிடம் இருந்து ரூ.70 லட்சம் மதிப்பிலான 2 கிலோ உயர்ரக கஞ்சாவை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். கைதான 3 பயணிகள் மீதும் விமான நிலைய போலீசார் தனித்தனியாக வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com