

புதுடெல்லி,
நாடு முழுவதும் சமையல் எரிவாயு சிலிண்டர் விநியோகம் சீராக இருப்பதாக நாட்டின் மிகப்பெரிய எண்ணெய் நிறுவனமான இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நேற்று அறிவித்துள்ளது. இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-
நாள்தோறும் 28 லட்சம் சிலிண்டர்கள் விநியோகிக்கப்படுகின்றன. வீட்டு உபயோகத்துக்கான சிலிண்டர் விநியோகத்துக்கு முன்னுரிமை அளித்து வருகிறோம். போர் பதற்றம், சர்வதேச சந்தையில் இடர்பாடுகள் உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகள் இருந்தாலும், இந்தியாவில் விநியோகம் சீராகவே உள்ளது. 87 சதவீத சிலிண்டர் முன்பதிவு எண்ம முறையில் மேற்கொள்ளப்படுகிறது. நேரில் வந்து முன்பதிவு செய்வதற்கு பதிலாக கைப்பேசி அழைப்பு மூலம் முன்பதிவு செய்யும் ஐவிஆர்எஸ் முறை மற்றும் குறுஞ்செய்தி மூலம் முன்பதிவு செய்ய மக்களை ஊக்குவித்து வருகிறோம்.
சரியான நபர்களுக்கு சிலிண்டர் விநியோகம் நடைபெறுகிறதா என்று தெரிந்துக்கொள்ள ஒருமுறை கடவு எண் மூலம் உறுதிப்படுத்தப்படுகிறது. விநியோகம் போதுமான அளவிலும் உள்ளது மற்றும் நிலைமையைத் தொடர்ந்து கண்காணித்து வருகிறோம். சில விநியோகஸ்தர்கள் முறைகேட்டில் ஈடுபடுவது தொடர்பாக பொதுமக்களிடம் இருந்தும் சமூக ஊடகங்கள் மூலம் புகார்கள் பெறப்படுகின்றன. சிலிண்டர்கள் பதுக்கி வைத்து அதிகவிலைக்கு விற்பனை செய்பவர்கள் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படுகிறது. இதுபோன்ற தவறுகளைத் தடுக்க விநியோக நிறுவனங்களை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். அதே நேரத்தில் தவறாக பரவும் தகவல்களை நம்பி மக்கள் அச்சத்தில் சிலிண்டர்களை முன்பதிவு செய்ய வேண்டாம் என்றும் அந்த நிறுவனம் கூறியுள்ளது.
போர்பதற்றம் ஏற்பட்ட பிறகு நாடு முழுவதும் இதுவரை 68,000 அதிரடி சோதனைகளில் பதுக்கிவைக்கப்பட்ட 48,000-க்கும் மேற்பட்ட சிலிண்டர்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. இது தொடர்பாக 855 வழக்குகளை காவல் துறையினர் பதிவு செய்துள்ளனர். 141 விநியோகஸ்தர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதில் 5 விநியோக நிறுவனங்கள் நீக்கப்பட்டு உள்ளது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.