

புதுடெல்லி,
சமையல் எரிவாயு சிலிண்டர் விலை இன்று மீண்டும் 25 ரூபாய் உயர்த்தப்படுவதாக எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளன. இரண்டு வாரங்களில் இரண்டாவது முறையாக கேஸ் சிலிண்டர் விலை உயர்த்தப்பட்டுள்ளது. முன்னதாக இந்த ஆண்டு தொடக்கம் முதல் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை 190 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் இன்று செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை உயர்வு மூலம் மத்திய அரசு ரூ 23 லட்சம் கோடி வருவாய் கிடைத்துள்ளது. இந்த 23 லட்சம் கோடி ரூபாய் எங்கே போனது? 2014இல் காங்கிரஸ் ஆட்சியில் இருந்த சமயத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ 410ஆக இருந்தது. இப்போது சமையல் எரிவாயு சிலிண்டர் விலை 116% உயர்ந்து ரூ 885ஆக உள்ளது.
பெட்ரோல் விலை 2014இல் 71.5 ரூபாயாக இருந்தது. இப்போது 42% உயர்ந்து ரூ 101ஆக உள்ளது. அதேபோல 57 ரூபாயாக இருந்த டீசல் விலையும் இப்போது 88 ரூபாயாக உயர்ந்துள்ளது. ஆனால், பிரதமர் நரேந்திர மோடி, நாட்டின் ஜிடிபி (GDP) தொடர்ந்து உயர்ந்து வருவதாகக் கூறுகிறார். மேலும் நிதி-மந்திரி நிர்மலா சீதாராமன் வரும் காலத்திலும் ஜி.டி.பி. உயரும் என்றே கூறுகிறார். அவர்கள் கூறும் GDP என்றால் என்ன என்பது இப்போது தான் எனக்குப் புரிகிறது. GDP என்றால் 'Gas -Diesel -Petrol' விலை என்று அவர்கள் புரிந்து கொண்டுள்ளார்கள். அதனால் தான் இது தொடர்ந்து உயர்ந்து வருகிறது.
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்வதால் பெட்ரோல், டீசல் விலை அதிகரிக்கிறது என்று கூறுகின்றனர். 2014இல் காங்கிரஸ் ஆட்சியில் இருந்த போது, சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை 105ஆக இருந்தது. இப்போது அது 32% குறைவாக 71ஆக உள்ளது. அதேபோல சமையல் எரிவாயு சிலிண்டர் விலையும் சர்வதேச சந்தையில் இப்போது 653 ரூபாயாக உள்ளது. இது 2014இல் இருந்த 880 ரூபாயைவிட 26% குறைவாகும்.
பெட்ரோல், டீசல் விலையேற்றம் என்பது நாட்டின் அனைத்து தரப்பு மக்களையும் பாதிக்கிறது. பெட்ரோல் -டீசல் விலை உயரும் போது, இதனால் நேரடியாகவும் மறைமுகமாகவும் பல கோடி மக்கள் பாதிக்கப்படுகிறார்கள். கடந்த 7 ஆண்டுகளாகவே நாட்டிலுள்ள விவசாயிகள், தொழிலாளர்கள், சிறு குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள், அரசு ஊழியர்கள், நேர்மையான தொழிலதிபர்கள் ஆகியோர் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். நரேந்திர மோடியின் நான்கைந்து நண்பர்களுக்கு மட்டுமே அனைத்து பலன்களும் கிடைக்கிறது என்று அவர் கூறினார்.