

பனாஜி,
நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பின் இரண்டாவது அலை தீவிரமாக பரவி வருகிறது. அதில் கோவா மாநிலத்தில் மொத்த பாதிப்புகளின் எண்ணிக்கை 1,52,401 ஆக அதிகரித்துள்ளது. 2,538 பேர் பலியாகியுள்ளனர். 1,34,164 பேர் குணமாகி வீடு திரும்பியுள்ளனர். தற்போது 15,699 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்நிலையில் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக ஊரடங்கை மேலும் நீட்டித்து கோவா மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.
இதுதொடர்பாக அம்மாநில முதல்-மந்திரி பிரமோத் சாவந்த் தனது டுவிட்டரில், 2021 ஜூன் 7 ஆம் தேதி காலை 7 மணி வரை ஊரடங்கு உத்தரவை நீட்டிக்க கோவா அரசு முடிவு செய்துள்ளது. இது தொடர்பான உத்தரவுகளை அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் வழங்க வேண்டும் என்று அவர் பதிவிட்டுள்ளார்.
முன்னதாக கொரோனா பரவலை தடுக்கும் வகையில் கடந்த மே 9ஆம் தேதி முதல் மே 23ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறக்கப்பட்டிருந்தது. இதனைத்தொடர்ந்து கொரோனா பாதிப்பை கட்டுக்குள் கொண்டு வரும் வகையில் மே 31ஆம் தேதி வரை கொரோனா கட்டுப்பாடுகள் நீட்டிக்கப்பட்டது.
இந்தசூழலில் ஊரடங்கு கட்டுப்பாடுகளை நீட்டித்து கோவா முதல்-மந்திரி பிரமோத் சாவந்த் இன்று உத்தரவிட்டுள்ளார். இதன்படி ஏற்கனவே அறிவித்தபடி, காலை 7 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை அத்தியாவசிய கடைகள் திறந்திருக்கும். உணவகங்கள், ஹோட்டல்களில் காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை பார்சல் சேவைக்கு மட்டும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது
பொதுமக்கள் தேவையின்றி வெளியில் சுற்றுவதை தவிர்க்க வேண்டும். அத்தியாவசிய தேவைகளுக்கு செல்லும் போது முகக்கவசம், போதிய சமூக இடைவெளி விட வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. கொரோனா தடுப்பு நடவடிக்கையாக தடுப்பூசி போட்டுக் கொள்ள அனைவரும் முன்வர வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.