காந்தியடிகளை பற்றி தவறாக பேசிய சர்ச்சை சாமியார் கைது..!

மத்தியபிரதேச மாநிலம் கஜுராஹோ பகுதியில் பதுங்கியிருந்த காளிசரண் மஹராஜை கைது செய்துள்ளனர்.
காந்தியடிகளை பற்றி தவறாக பேசிய சர்ச்சை சாமியார் கைது..!
Published on

ராய்ப்பூர்,

மராட்டிய மாநிலத்தைச் சேர்ந்த இந்து மத தலைவர் காளிசரண் மகாராஜ், சட்டீஸ்கர் மாநிலம் ராயப்பூரில் நடைபெற்ற ஆன்மீக மாநாட்டில் பங்கேற்று பேசியபோது, மகாத்மா காந்தி குறித்து தவறான வார்த்தையை பயன்படுத்தினார். மேலும் மகாத்மாவை சுட்டுக் கொன்ற கோட்சேவை பாராட்டி பேசினார். அவரது பேச்சு கடும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இது தொடர்பாக காங்கிரஸ் கட்சியினர் அளித்த புகாரை அடுத்து காளிசரண் மீது ராய்ப்பூர் போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். அவர் மகாத்மா காந்தியடிகளை பற்றி அவதூறான கருத்துக்களை பேசியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில்,மத்தியபிரதேச மாநிலம் கஜுராஹோ பகுதியில் பதுங்கியிருந்த காளிசரண் மகாராஜை, சட்டீஸ்கர் காவல்துறையின் 10 பேர் கொண்ட போலிஸ் குழுவினர் தீவிர தேடுதல் வேட்டைக்கு பின் கைது செய்துள்ளனர். மேலும், காளிசரண் மகாராஜ் தங்கியிருந்த சத்தர்பூர் மாவட்டத்தில் உள்ள விடுதி உரிமையாளரை சட்டீஸ்கர் காவல்துறை காவலில் எடுத்துள்ளது.

காளிசரண் மகாராஜ் போலீசாரை ஏமாற்றும் விதத்தில் பல நடவடிக்கைகளை மேற்கொண்டார். காளிசரண் கஜுராஹோவில் ஒரு விருந்தினர் மாளிகையை முன்பதிவு செய்தார். ஆனால் அவர் அங்கு தங்கவில்லை. மாறாக கஜுராஹோவில் இருந்து சுமார் 25 கிமீ தொலைவில் உள்ள ஒரு வாடகை வீட்டிற்கு போலீஸை ஏமாற்றுவதற்காகச் சென்றார்.

மேலும், காவல்துறை கண்காணிப்பில் இருந்து தப்பிக்க, அவரது நெருங்கிய உதவியாளர்கள் அனைவரும் தங்கள் போன்களை சுவிட்ச் ஆப் செய்துவிட்டனர்.

இறுதியாக இன்று காலை, 10 பேர் கொண்ட போலீஸ் குழு, அவரைக் கண்டுபிடித்து, கைது செய்து மீண்டும் சத்தீஸ்கர் தலைநகர் ராய்ப்பூருக்கு அழைத்துச் சென்றது.

மேற்கண்ட தகவல்களை ராய்ப்பூர் காவல்துறையின் மூத்த போலீஸ் அதிகாரி பிரசாந்த் அகர்வால் தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com