விமானத்தின் கழிவறை ஸ்பீக்கரில் மறைத்து வைக்கப்பட்டிருந்த தங்கக் கட்டிகள் - நூதன கடத்தல் முயற்சி முறியடிப்பு

விமானத்தில் வந்திறங்கிய பயணிகளிடம் அதிகாரிகள் நடத்திய சோதனையில் கடத்தல் தங்கம் எதுவும் சிக்கவில்லை.
விமானத்தின் கழிவறை ஸ்பீக்கரில் மறைத்து வைக்கப்பட்டிருந்த தங்கக் கட்டிகள் - நூதன கடத்தல் முயற்சி முறியடிப்பு
Published on

காந்திநகர்,

ஆமதாபாத் விமான நிலையத்திற்கு துபாயில் இருந்து தங்கம் கடத்தி வரப்படுவதாக சுங்கத்துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இந்த தகவலின் அடிப்படையில் நேற்றைய தினம் துபாயில் இருந்து ஆமதாபாத்தில் உள்ள சர்தார் வல்லபாய் பட்டேல் சர்வதேச விமான நிலையத்திற்கு வந்திறங்கிய பயணிகளிடம் அதிகாரிகள் தீவிர சோதனை நடத்தினர்.

ஆனால் பயணிகளிடம் நடத்தப்பட்ட சோதனையில் கடத்தல் தங்கம் எதுவும் சிக்கவில்லை. இதையடுத்து சம்பந்தப்பட்ட விமானத்தில் விமான நிலைய அதிகாரிகள் சோதனை நடத்தினர். இந்த சோதனையின்போது, விமானத்தின் கழிவறையில் உள்ள ஸ்பீக்கர் பெட்டிக்குள் 24 தங்கக் கட்டிகள் மறைத்து வைக்கப்பட்டிருந்ததை அதிகாரிகள் கண்டுபிடித்தனர். இந்த தங்கக் கட்டிகளின் மதிப்பு சுமார் ரூ.4.26 கோடி என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

முதற்கட்ட விசாரணையில், துபாயில் இருந்து விமானத்தில் தங்கத்தை கடத்தி வந்த மர்ம நபர்கள், அவற்றை விமான கழிவறையில் உள்ள ஸ்பீக்கரில் மறைத்து வைத்துவிட்டு, பின்னர் விமான ஊழியர்கள் அல்லது வேறு பயணிகள் மூலம் தங்கத்தை வெளியே கடத்துவதற்கு திட்டமிட்டிருக்கலாம் என்றும், தற்போது அந்த கடத்தல் திட்டம் முறியடிக்கப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தொடர்ந்து, தங்கத்தை கடத்தி வந்த நபர்கள் யார் என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com