மே.வங்காள தேர்தல் முடிந்த உடன் பெட்ரோல், டீசல் விலையை உயர்த்த திட்டம்? - மத்திய அரசு விளக்கம்

ஹோர்முஸ் நீரிணையை ஈரான் மூடியுள்ளது
மே.வங்காள தேர்தல் முடிந்த உடன் பெட்ரோல், டீசல் விலையை உயர்த்த திட்டம்? - மத்திய அரசு விளக்கம்
Published on

டெல்லி,

ஈரான் - அமெரிக்கா இடையேயான மோதல் தொடர்ந்து நீடித்து வருகிறது. இரு தரப்பும் இடையேயான முதற்கட்ட பேச்சுவார்த்தை தோல்வியடைந்தது. 2ம் கட்ட பேச்சுவார்த்தை நடந்த மேற்கொள்ளப்பட்ட முயற்சியும் தோல்வியடைந்தது.

அதேவேளை, இந்த மோதலை தொடர்ந்து அரபிக்கடலில் ஹோர்முஸ் நீரிணையை ஈரான் மூடியுள்ளது. இதனால் சர்வதேச சந்தைக்கு அரபு நாடுகளில் இருந்து கச்சா எண்ணெய் கொண்டு வருவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் கடும் உயர்வை சந்தித்துள்ளது. அதன்படி, ஒரு பேரல் கச்சா எண்ணெய் 114 அமெரிக்க டாலராக அதிகரித்துள்ளது. கச்சா எண்ணெய் விலை உயர்வால் பாகிஸ்தான் பல்வேறு நாடுகளில் பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்பட்டுள்ளது. இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் இதுவரை உயர்த்தவில்லை.

அதேவேளை, ஆந்திராவில் பெட்ரோல், டீசலுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டதாக தகவல் வெளியானது. ஆந்திராவில் 400 பெட்ரோல் நிலையங்களில் கடந்த ஞாயிற்றுக்கிழமை பெட்ரோல், டீசல் காலியாகிவிட்டதாகவும் இதனால் பிற பெட்ரோல் நிலையங்களில் வாடிக்கையாளர்கள் நீண்ட வரிசையில் நின்று வாகனங்களுக்கு பெட்ரோல், டீசல் நிரப்பிச்சென்றதாகவும் தகவல் வெளியானது. மேலும், சில பெட்ரோல், டீசல் நிலையங்களில் தேவை 30 சதவீதம் அதிகரித்துள்ளதாகவும் தகவல் வெளியானது. இதனிடையே, 5 மாநில சட்டசபை தேர்தல் காரணமாக பெட்ரோல், டீசல் விலையை உயர்த்த எண்ணெய் நிறுவனங்களுக்கு மத்திய அரசு அனுமதி அளிக்கவில்லை என தகவல் வெளியானது.

இந்நிலையில், மத்திய பெட்ரோலியம், இயற்கை எரிவாயுத்துறை இணைச்செயலாளர் சுஜிதா சர்மா இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, நாளை நடைபெற உள்ள மேற்கு வங்காள சட்டசபை தேர்தலுக்குப்பின் நாடு முழுவதும் பெட்ரோல், டீசல் விலையை உயர்த்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளதா?, நாடு முழுவதும் பெட்ரோல், டீசலுக்கு தட்டுப்பாடு நிலவுகிறதா? உள்பட பல்வேறு கேள்விகள் எழுப்பப்பட்டன. அதற்கு பதில் அளித்த சுஜிதா கூறியதாவது,

தேர்தல் முடிந்தபின்னர் பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தும் எந்த திட்டமும் மத்திய அரசிடம் இல்லை. சில பகுதிகளில் மக்கள் பதற்றப்பட்டு அதிக அளவில் பெட்ரோல், டீசலை வாங்குகின்றனர். நாங்கள் மாநில அரசுகளுடன் தொடர்பில் உள்ளோம். அனைத்து சில்லறை வர்த்தக நிலையங்களும் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகின்றன. பெட்ரோல், டீசல் கையிருப்பு, விநியோகத்திற்கு முன்னுரிமை கொடுத்து வருகிறோம். பெட்ரோல், டீசலுக்கு எந்த தட்டுப்பாடும் இல்லை’ என்றார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com