

புதுடெல்லி,
சுற்றுலாவை மேம்படுத்த தொழில்துறையினருடன் மத்திய அரசு இணைந்து செயல்படுவதாக மத்திய மந்திரி கஜேந்திர சிங் செகரவத் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பாக அவர் கூறியிருப்பதாவது:-
இந்தியா இப்போது தனது சுற்றுலாப் பயணத்தில் ஒரு முக்கியமான கால கட்டத்தில் உள்ளது. இன்றைய சுற்றுலாப்பயணிகள், அழகிய அடையாளச்சின்னங்களையும் காட்சிகளை மட்டுமே விரும்புவதில்லை. நினைவில் நிற்கும் சிறந்த அனுபவங்களையும் அவர்கள் தேடுகிறார்கள்.
உள்ளூர் உணவு, மரபுகள், இசை, கைவினைப் பொருட்கள், இயற்கை அழகு, தங்கும் விடுதிகள், சமூகங்களுடனான சந்திப்புகள் ஆகியவையும் இப்போது முக்கியத்துவம் பெறுகின்றன. எனவே சுற்றுலாவில் இதற்கு ஏற்ற மாற்றங்கள் தேவை.
தொழில்நுட்பம், போக்குவரத்து, விருந்தோம்பல், உள்ளடக்கம், டிஜிட்டல் தொடர்பு ஆகியவற்றில் உள்ள திறன்களை ஒன்றிணைப்பதற்காக, தொழில் துறையினருடன் சுற்றுலா அமைச்சகம் அதிக அளவில் இணைந்து செயல்பட்டு வருகிறது.
ஒரு கிராமம் அழகான நிலப்பரப்பைக் கொண்டிருப்பதால் மட்டுமே கவர்ச் சிகரமானதாக மாறிவிடுவதில்லை.
அதன் அடையாளம் அதன் மரபுகள், அதன் உணவு வகைகள், அதன் கைவினைப் பொருட்கள், அதன் கதைகள், அதன் இசை போன்றவை பார்வையாளரை வரவேற்கும் விதத்தில் அமைய வேண்டும்.
இதை மேம்படுத்தி சுற்றுலா பயணிகளை ஈர்க்க மக்களின் ஒத்துழைப்பும் அவசியம் தேவை.
இவ்வாறு அவர் கூறினார்.