

கேரளாவில் அண்மையில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் ஆட்சியை பிடித்தது. முதல்வராக விடி சதீஷன் பொறுப்பேற்றார். புதிய அரசு பொறுப்பேற்ற நிலையில் நேற்று சட்டசபையின் 16வது கூட்டத்தொடர் கவர்னர் ராஜேந்திர அர்லேகரின் உரையுடன் தொடங்கியது. கூட்டத் தொடக்க நிகழ்வில் வந்தே மாதரம் பாடலின் தொடக்கப் பகுதிகள் இசைக்கருவிகள் மூலம் மட்டுமே ஒலிக்கப்பட்டது. இதற்கு பாஜக தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.
சட்டப்பேரவை நிகழ்ச்சிக்குப் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த கவர்னர் ராஜேந்திர அர்லேகர், “கவர்னர் அவையில் இருக்கும்போது வந்தே மாதரம் பாடல் முழுமையாகப் பாடப்பட வேண்டும். ஆனால் இங்கு பாடல் பாடப்படாமல், வெறும் இசையாக மட்டுமே ஒலிக்கப்பட்டது. இதுதொடர்பாக சபாநாயகர் ஏ.என். ஷம்சீரிடம் பேசியுள்ளேன். இந்த விவகாரத்துக்கு உரிய தீர்வு காணப்படும் என நம்புகிறேன். அடுத்த கூட்டத்தில் நிலைமை எவ்வாறு அமைகிறது என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும்” என்றார்.
இந்த நிலையில், வந்தே மாதரம் பாடல் சர்ச்சை குறித்து முன்னாள் முதல் மந்திரி பினராயி விஜயன் கூறுகையில், “வந்தே மாதரம் பாடலை முழுமையாகப் பாட வேண்டிய அவசியம் இல்லை என்பது ஏற்கனவே தெளிவுபடுத்தப்பட்ட விஷயம். பாடலின் முதல் இரண்டு சரணங்கள் மட்டும் பாடப்பட்டாலே போதுமானது. மேலும், அந்தப் பாடல் இசைக்கப்படும் போது அனைவரும் எழுந்து நிற்க வேண்டும் என்ற கட்டாயமும் இல்லை. வந்தே மாதரம் பாடலை முழுமையாகப் பாட வேண்டும் என்ற வலியுறுத்தல் ஆர்எஸ்எஸ் அமைப்பின் நிகழ்ச்சி நிரலின் ஒரு பகுதியாகும்.
பதவியேற்பு விழாவின் போது அந்தப் பாடல் முழுமையாகப் பாடப்பட்டது. அது நடந்திருக்கக் கூடாது. அந்த அனுபவத்திற்குப் பிறகு மாநில அரசு தெளிவான முடிவை எடுத்திருப்பதாகத் தெரிகிறது. தற்போதைய விவகாரத்தில் பின்பற்றப்படும் அணுகுமுறையே சரியான நிலைப்பாடாகும்” என்று தெரிவித்தார். தமிழ்நாட்டில் வந்தே மாதரம் பாடல் முதலில் பாடப்பட்டு தமிழ்த்தாய் வாழ்த்து மூன்றாவது இடத்திற்கு தள்ளப்பட்டது விவாதப்பொருளாகியுள்ள நிலையில், கேரளாவிலும் இந்த விவகாரம் தற்போது பேசு பொருளாகியுள்ளது.