

ஐதராபாத்,
தெலுங்கானா மாநிலத்தின் உள்துறை மந்திரியாக பதவி வகித்து வருபவர் முகமது மக்மூத் அலி. அவரது பேரன் பர்கான் அகமது. பர்கானின் டிக் டாக் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில், அவரும் அவரது நண்பரும் போலீஸ் வேன் மீது அமர்ந்து இருக்கின்றனர். பின் கீழே இறங்கி, டிக் டாக் செயலியில், ஒரு படத்தின் வசனத்திற்கு வாய் அசைக்கின்றனர். போலீஸ் ஐ.ஜி.க்கு மிரட்டல் விடும் வகையில் அந்த வசனம் அமைந்திருப்பதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து உள்துறை மந்திரி வியாழக்கிழமை அன்று கூறும்போது, குடும்பத்தோடு ஒரு விழாவில் கலந்துகொள்ள யகாட்புரா சென்று இருந்தோம்.
அங்குதான் இந்த சம்பவம் நடந்து உள்ளது. அந்த வீடியோவை பார்க்கும்போது, என் பேரன் போலீஸ் வேனில் அமர்ந்து இருக்கிறாரே தவிற, அவர் எதுவும் பேசவில்லை. கூட இருக்கும் அவருடைய நண்பர்தான் வீடியோவில் பேசுகிறார் என்றார்.
மேலும் இது தொடர்பாக விசாரிக்கப்படும் என்றார். இந்த விவகாரத்தால் போக்குவரத்து விதிமீறல் எதுவும் நடக்கவில்லை என்று போலீசார் தெரிவித்தனர். இதுபற்றி டி.ஜி.பி. மகேந்தர் ரெட்டி கருத்து எதுவும் தெரிவிக்க மறுத்துவிட்டார்.