

லக்னோ,
உத்தர பிரதேச மாநிலத்தில் வரதட்சணையாக கார் கேட்ட மாப்பிள்ளை வீட்டாருக்கு, பொம்மை காரை பரிசாக கொடுத்து மணமகளின் தந்தை திருமணத்தை நிறுத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உத்தர பிரதேச மாநிலம், மீரட் மாவட்டத்தைச் சேர்ந்த மணமகளுக்கும், கியான்பூர் கிராமத்தைச் சேர்ந்த ஷம்ஷேர் என்பவரது மகனுக்கும் கடந்த ஐந்து மாதங்களுக்கு முன்பு திருமணம் நிச்சயிக்கப்பட்டது.
நிச்சயதார்த்தத்தின்போது ஒரு லட்சம் ரூபாய் ரொக்கம் மற்றும் சீர்வரிசை பொருட்கள் வழங்கப்பட்ட நிலையில், அண்மையில் மணமகளின் தந்தை தனது நிலத்தை விற்றுள்ளார்.
இதனை அறிந்த மணமகன் வீட்டார், வரதட்சணையாக 'மஹிந்திரா தார்' கார் வேண்டும் என வற்புறுத்தியதாக கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சியடைந்த மணமகளின் தந்தை, திருமண தேதியை முடிவு செய்யும் சடங்கிற்காக மணமகன் குடும்பத்தினரைத் தனது வீட்டிற்கு அழைத்துள்ளார்.
காலையிலேயே வீட்டிற்கு வந்த மாப்பிள்ளை வீட்டாரை இரவு 10 மணி வரை காக்க வைத்த மணமகளின் தந்தை, இறுதியில் ஒரு மஞ்சள் நிறப் பொம்மைக் காரை மணமகனின் தந்தையிடம் பரிசாக வழங்கினார். அப்போது பேசிய அவர், "உங்களுக்கு மனிதர்களை விடக் கார் தான் முக்கியமாக போய்விட்டது. இதோ, நீங்கள் கேட்ட தார் கார்! இதை ஓட்டி மகிழுங்கள். எங்களுக்கு இந்தத் திருமணம் வேண்டாம்" என கூறி, நிச்சயதார்த்த பொருட்களை திருப்பி கொடுத்து திருமணத்தை ரத்து செய்தார்.