வரம்பை மீறும் குரோக் ஏஐ: எக்ஸ் தளத்திற்கு நோட்டீஸ்- மத்திய அரசு அதிரடி


வரம்பை மீறும் குரோக் ஏஐ: எக்ஸ் தளத்திற்கு நோட்டீஸ்- மத்திய அரசு அதிரடி
x

Image Courtesy: Grok AI

72 மணி நேரத்திற்குள் இது தொடர்பாக அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என மத்திய அரசு அதிரடியாக நோட்டீஸ் பிறப்பித்துள்ளது.

ஏஐ எனப்படும் செயற்கை நுண்ணறிவு இணைய உலகத்தை ஆக்கிரமிக்கத் தொடங்கியுள்ளது. எந்த ஒரு சின்ன சந்தேகம் ஏற்பட்டாலும் உடனடியாக ஏஐயிடமே இன்றைய ஜென்சி தலைமுறையினர் கேட்டு விவரம் தெரிந்துகொள்வதை பார்க்க முடிகிறது. கேட்ட தகவல்கள் உடனுக்குடன் கிடைப்பதால், ஏஐக்கு மவுசு அதிகரித்துக்கொண்டே செல்கிறது. சாட்ஜிபிடி, கூகுளின் ஜெமினி, எக்ஸ் நிறுவனத்தின் குரோக் ஏஐ உள்ளிட்டவை ஏஐ சந்தைகளில் முன்னணி வகிக்கின்றன.

ஏஐ பயன்படுத்தி உருவாக்கப்படும் வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் மக்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தும் விதமாகவும் அமைந்துள்ளன. இந்த நிலையில், எலான் மஸ்க்கின் குரோக் ஏஐ, பெண்களை மையப்படுத்தி ஆபாசமாகவும் நாகரிகமற்ற முறையிலும் படங்களை உருவாக்குவதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. இது குறித்து மத்திய அரசுக்கும் புகார்கள் சென்றன.

இதனையடுத்து, இந்த விவகாரத்தில் மத்திய தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சகம் அதிரடியாக நோட்டீஸ் பிறப்பித்துள்ளது. தகவல் தொழில்நுட்பச் சட்டம் மற்றும் 2021-ம் ஆண்டின் ஐடி விதிகள் ஆகியவற்றின் கீழ், எக்ஸ் நிறுவனத்திற்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. பயனர்களின் தனியுரிமை மற்றும் கண்ணியத்தை மீறும் வகையில் செயற்கையாக படங்கள் மற்றும் வீடியோக்கள் குரோக் ஏஐ மூலம் உருவாக்கப்பட்டுள்ளதாக அதில் கூறப்பட்டுள்ளது.

இதுபோன்ற செயல்களில் ஈடுபடுபவர்களின் கணக்குகளை ரத்து செய்ய வேண்டும்; மோசமாக சித்தரிக்கப்பட்ட படங்களை நீக்க வேண்டும்; 72 மணி நேரத்திற்குள் இது தொடர்பாக அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். இதை மீறும் பட்சத்தில் உரிய சட்டப்பிரிவுகளின் கீழ் நடவடிக்கை எடுக்க நேரிடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

1 More update

Next Story