

புதுடெல்லி,
நடப்பு ஆண்டின் ஜனவரியில் மொத்த ஜி.எஸ்.டி. வருவாயானது ரூ.1 லட்சம் கோடியை எட்டியுள்ளது என நிதி மந்திரி பியூஷ் கோயல் டுவிட்டரில் தெரிவித்து உள்ளார். இதுபற்றி அவர் வெளியிட்டுள்ள செய்தியில், ஏழைகள், விவசாயிகள் மற்றும் நடுத்தர மக்கள் பயன்பெறும் வகையில் பல்வேறு பொருட்களுக்கான வரி விதிப்புகள் பெருமளவில் குறைக்கப்பட்டன. இருந்தபொழுதிலும், இந்த ஜனவரியில் ஜி.எஸ்.டி. வருவாயானது ரூ.1 லட்சம் கோடியை எட்டி சாதனை படைத்து உள்ளது என தெரிவித்து உள்ளார்.
நடப்பு நிதியாண்டில் இந்த வருவாய் ரூ.1 லட்சம் கோடியை கடந்துள்ளது இது 3வது முறையாகும். இதற்கு முன் கடந்த ஏப்ரல் மற்றும் அக்டோபரில் இந்த உச்சத்தினை வருவாய் எட்டியது.
கடந்த ஏப்ரலில் ஜி.எஸ்.டி. வருவாய் ஆனது ரூ.1.03 லட்சம் கோடியாகவும், மே மாதத்தில் ரூ.94,016 கோடியாகவும், ஜூனில் ரூ.95,610 கோடியாகவும், ஜூலையில் ரூ.96,483 கோடியாகவும், ஆகஸ்டில் ரூ.93,960 கோடியாகவும், செப்டம்பரில் ரூ.94,442 கோடியாகவும், அக்டோபரில் ரூ.1 லட்சத்து 710 கோடியாகவும், நவம்பரில் ரூ.97,637 கோடியாகவும், டிசம்பரில் ரூ.94,725 கோடியாகவும் இருந்துள்ளது.