

புதுடெல்லி,
நாடு முழுவதும் ஒரே சீரான வரி விதிப்பு முறையை நடைமுறைப்படுத்தும் வகையில் கடந்த 2017-ம் ஆண்டு ஜூலை மாதம் மத்திய அரசு சரக்கு மற்றும் சேவை (ஜி.எஸ்.டி.) வரியை அமல்படுத்தியது. பல்வேறு நேரடி மற்றும் மறைமுக வரிகளை ஒன்றாக இணைத்து இந்த ஜி.எஸ்.டி. முறை உருவாக்கப்பட்டது.
மாதந்தோறும் சேகரிக்கப்படும் இந்த வரியின் மொத்த தொகையை மத்திய அரசு வெளியிட்டு வருகிறது. அந்தவகையில் கடந்த மாதம் (நவம்பர்) வசூலிக்கப்பட்ட மொத்த ஜி.எஸ்.டி. வரி தொகையின் விவரங்களை நேற்று மத்திய அரசு வெளியிட்டது.
அதன்படி கடந்த மாதத்தின் மொத்த ஜி.எஸ்.டி. வசூல் தொகை ரூ.1,03,492 கோடி ஆகும். இதில் மத்திய ஜி.எஸ்.டி. தொகை ரூ.19,592 கோடியும், மாநில ஜி.எஸ்.டி. ரூ.27,144 கோடியும், ஒருங்கிணைந்த ஜி.எஸ்.டி. தொகை ரூ.49,028 கோடியும் ஆகும்.
ஜி.எஸ்.டி. அமல்படுத்தப்பட்டதில் இருந்து மொத்த மாத வசூல் ரூ.1 லட்சம் கோடியை கடந்திருப்பது இது 8-வது முறையாகும். அதே நேரம் இது 3-வது மிகப்பெரிய மாதாந்திர வசூல் எனவும் மத்திய நிதியமைச்சகம் நேற்று தகவல் வெளியிட்டது.
2 மாதங்கள் எதிர்மறை வளர்ச்சியை கொண்டிருந்த ஜி.எஸ்.டி. வசூல் தற்போது நேர்மறை வளர்ச்சியை அடைந்திருப்பதாக கூறியுள்ள நிதி அமைச்சகம், கடந்த ஆண்டு நவம்பர் மாதத்தை ஒப்பிடுகையில் இது 6 சதவீதம் அதிகம் எனவும் குறிப்பிட்டு உள்ளது.
இந்த ஆண்டில் மிக அதிக அளவாக கடந்த மாதத்தில் உள்நாட்டு பரிவர்த்தனைகள் 12 சதவீத வளர்ச்சியை கண்டிருந்தது. அதேநேரம் இறக்குமதி சார்ந்த ஜி.எஸ்.டி. வசூல் எதிர்மறை (மைனஸ் 13 சதவீதம்) வளர்ச்சியையே கொண்டிருந்தன. எனினும் முந்தைய மாதத்தை (மைனஸ் 20 சதவீதம்) ஒப்பிடுகையில் இது சற்று முன்னேற்றம் அடைந்திருந்திருந்ததாகவும் மத்திய அரசு தனது அறிக்கையில் கூறியுள்ளது.