குல்பூஷண் ஜாதவை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் - பாகிஸ்தானிடம் இந்தியா வலியுறுத்தல்

குல்பூஷண் ஜாதவை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்று பாகிஸ்தானை இந்தியா வலியுறுத்தி உள்ளது.
குல்பூஷண் ஜாதவை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் - பாகிஸ்தானிடம் இந்தியா வலியுறுத்தல்
Published on

புதுடெல்லி,

இந்திய கடற்படையின் முன்னாள் அதிகாரியான குல்பூஷண் ஜாதவ் (வயது 49), தங்கள் நாட்டில் உளவு வேலை பார்த்ததாக அபாண்டமாக பழிபோட்டு, 2017-ம் ஆண்டு பாகிஸ்தான் மரண தண்டனை விதித்தது. தூதரக ரீதியில் அவரை தொடர்பு கொள்ளக்கூட அந்த நாடு அனுமதி தரவில்லை.

இந்த விவகாரத்தை இந்தியா, திஹேக் (நெதர்லாந்து) நகரில் உள்ள சர்வதேச கோர்ட்டுக்கு எடுத்துச் சென்றது. அதை விசாரித்த சர்வதேச கோர்ட்டு, ஜாதவ் மரண தண்டனையை நிறைவேற்ற தடை விதித்தது. தொடர்ந்து, வழக்கை விசாரித்து முடித்து நேற்று முன்தினம் தனது இறுதி தீர்ப்பை வழங்கியது. அதில் ஜாதவின் மரண தண்டனையை நிறுத்தி வைத்த சர்வதேச கோர்ட்டு, இந்த தண்டனை தொடர்பாக மறு ஆய்வு செய்ய உத்தரவிட்டது. இது இந்தியாவுக்கு கிடைத்துள்ள மிகப்பெரிய வெற்றி ஆகும்.

இது தொடர்பாக நாடாளுமன்றத்தின் இரு சபைகளிலும் மத்திய அரசின் சார்பில் வெளியுறவு மந்திரி எஸ். ஜெய்சங்கர் நேற்று பேசினார். அபபோது அவர் கூறியதாவது:-

இந்தியரான குல்பூஷண் ஜாதவ் மீது புனையப்பட்ட குற்றச்சாட்டின்பேரில் பாகிஸ்தான் ராணுவ கோர்ட்டு மரண தண்டனை விதித்தது. அவருடன் தூதரக தொடர்புக்கு கூட அனுமதிக்கவில்லை. அதனால் நாம் சர்வதேச கோர்ட்டை நாடினோம். அங்கு தற்காலிகமாக முதலில் மரண தண்டனைக்கு தடை விதிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து நிரந்தர நிவாரணத்துக்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது.

சர்வதேச கோர்ட்டு தனது தீர்ப்பை நேற்று (நேற்று முன்தினம்) வழங்கியது. 15 நீதிபதிகள் ஒருமனதாக தீர்ப்பை வழங்கி உள்ளனர். எதிர் கருத்தை வெளிப்படுத்திய ஒரே நீதிபதி பாகிஸ்தானை சேர்ந்தவர்.

சர்வதேச கோர்ட்டு கூறியுள்ளபடி, மேலும் தாமதப்படுத்தாமல், ஜாதவின் உரிமைகள் குறித்து அறிவிக்க வேண்டிய கடமை பாகிஸ்தானுக்கு உள்ளது; அவருக்கு இந்தியா தூதரக தொடர்பு வழங்கவும் பாகிஸ்தான் கடமைப்பட்டுள்ளது.

சர்வதேச கோர்ட்டின் தீர்ப்பை வரவேற்கிறோம்.

ஜாதவ், அவர் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளில் நிரபராதி. அவரை உடனடியாக விடுவித்து, இந்தியாவுக்கு திருப்பி அனுப்ப வேண்டும் என்று பாகிஸ்தானுக்கு அழைப்பு விடுக்கிறோம். அவரது குடும்பத்தாருக்கு நமது வலுவான ஒற்றுமையை வெளிப்படுத்துவோம். கடினமான சூழ்நிலைகளில் அவர்கள் முன்மாதிரியான தைரியத்தை காட்டி உள்ளனர்.

ஜாதவின் பாதுகாப்பையும், நல்வாழ்வையும், அவர் இந்தியாவுக்கு விரைவில் திரும்புவதையும் உறுதிப்படுத்தும் அனைத்து முயற்சிகளையும் அரசு தீவிரமாக தொடரும். இவ்வாறு அவர் கூறினார்.

சர்வதேச கோர்ட்டின் தீர்ப்பை பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் வரவேற்று உள்ளார். இதையொட்டி அவர் டுவிட்டரில் வெளியிட்ட பதிவில், தளபதி குல்பூஷண் ஜாதவை விடுதலை செய்து, இந்தியாவுக்கு திருப்பி அனுப்புமாறு கூறாத சர்வதேச கோர்ட்டு தீர்ப்பை பாராட்டுகிறேன். பாகிஸ்தான் மக்களுக்கு எதிரான குற்றங்களை அவர் செய்துள்ளார். பாகிஸ்தான் தொடர்ந்து சட்டப்படி செய்ய வேண்டியதை செய்யும் என கூறி உள்ளார்.

இதே கருத்தை பாகிஸ்தான் வெளியுறவு மந்திரி ஷா மக்மூது குரேஷியும் தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com