புதிய தலைமை தேர்தல் ஆணையராக ஞானேஷ்குமார் நியமனம்

புதிய தலைமை தேர்தல் ஆணையராக ஞானேஷ்குமார், நாளை பதவியேற்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
புதிய தலைமை தேர்தல் ஆணையராக ஞானேஷ்குமார் நியமனம்
Published on

புதுடெல்லி,

இந்திய தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் இன்று (பிப்.. 18-ம் தேதி) ஒய்வு பெறுகிறார். இதனால், புதிய தலைமைத் தேர்தல் ஆணையரை தேர்வு செய்ய மத்திய அரசு தீவிரம் காட்டி வந்தது. தேர்தல் ஆணையர்கள் நியமனம் பொறுத்தவரை பிரதமர் முன்மொழியும் ஒருவரை ஜனாதிபதி நியமனம் செய்து வந்தார். தேர்தல் ஆணையர்கள் தலைமைத் தேர்தல் ஆணையராக பதவி உயர்த்தப்பட்டு வந்தனர்.

இந்நிலையில், மத்திய அரசு புதிய சட்டத்தை கொண்டு வந்தது. அதன்படி, பிரதமர் தலைமையில் மூன்று பேர் கொண்ட குழு தேர்தல் ஆணையர்களை தேர்ந்தெடுப்பதாகும். பிரதமர் தலைமையிலான இந்த தேடுதல் குழுவில் ஒரு மத்திய மந்திரி, நாடாளுமன்ற எதிர்க்கட்சி தலைவர் இடம் பெறுவர். இந்த சூழலில், ராஜீவ் குமார் பணி ஓய்வுக்கு பிறகு அடுத்த ஆணையர் யார் என்பதை முடிவு செய்ய இந்த குழு நேற்று கூடியது. பிரதமர் தலைமையிலான இந்த குழுவில் நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி மற்றும் மத்திய உள்துறை மந்திரி அமித் ஷா ஆகியோர் இடம் பெற்றிருந்தனர்.

ராஜீவ் குமாருக்குப் பிறகு, ஞானேஷ் குமார் தான் மூத்த தேர்தல் ஆணையராக உள்ளார் என்றும், அவரது பெயர் பரிந்துரைக்கப்படலாம் என்றும் தகவல் வெளியாகி இருந்தது. ஆனால், தேர்வுக் குழு தற்போதைய தேர்தல் ஆணையர்களில் ஒருவருக்கு பதவி உயர்வு அளிக்குமா அல்லது மத்திய அமைச்சரவை செயலாளர் பதவிக்கு இணையான ஒருவரை தேர்வு செய்யுமா? என்பது எதிர்பார்ப்பாக இருந்தது.

இந்நிலையில் புதிய தலைமை தேர்தல் ஆணையராக ஞானேஷ்குமார் நியமனம் செய்யப்பட்டுள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. இதன்படி தேர்தல் ஆணையர் ராஜீவ் குமாருக்குப் பிறகு இரண்டு தேர்தல் ஆணையர்களில் மூத்தவரான ஞானேஷ் குமார், அவருக்குப் பிறகு பதவியேற்பார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது தேர்வு செய்யப்பட்டுள்ள தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார், இந்தாண்டு பீகாரில் நடைபெற உள்ள சட்டசபை தேர்தல், 2026-ம் ஆண்டு நடக்க உள்ள தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரி, அசாம் மற்றும் மேற்கு வங்காள சட்டசபை தேர்தல்கள், 2027-ல் நடைபெற உள்ள கோவா, மணிப்பூர், பஞ்சாப், உத்தரப்பிரதேசம், குஜராத் மற்றும் இமாச்சலப் பிரதேச தேர்தல் மற்றும் 2029 நாடாளுமன்ற தேர்தலையும் நடத்துவார் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் தலைமை தேர்தல் ஆணையராக ஞானேஷ்குமார் நாளை ( பிப்.19-ம் தேதி) பதவியேற்க உள்ளதாக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. 

தலைமைத் தேர்தல் ஆணையர் மற்றும் பிற தேர்தல் ஆணையர்கள் (நியமனம், பணி நிபந்தனைகள் மற்றும் பதவிக்காலம்) சட்டம், 2023 இன் பிரிவு 4 ஆல் வழங்கப்பட்ட அதிகாரங்களைப் பயன்படுத்தி இந்த நியமனம் செய்யப்பட்டதாக சட்டம் மற்றும் நீதி அமைச்சகம் வெளியிட்ட அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சட்டம் மற்றும் நீதி அமைச்சகம் வெளியிட்ட மற்றொரு அறிவிப்பில், டாக்டர் விவேக் ஜோஷி, இந்தியத் தேர்தல் ஆணையத்தில் தேர்தல் ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார் என்று கூறப்பட்டுள்ளது. விவேக் ஜோஷி 1989 ஆம் ஆண்டு அரியானா கேடரைச் சேர்ந்த ஐ.ஏ.எஸ். அதிகாரி ஆவார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com