இந்தியாவில் வறுமை குறைந்துள்ளதா? உலக வங்கி அறிக்கையில் தகவல்

இந்தியாவில் வறுமை கணிசமாக குறைந்துள்ள போதிலும், ஊதிய ஏற்றத்தாழ்வு, வேலைவாய்ப்பின் தரம் மற்றும் கிராமப்புற வறுமை ஆகியவை தொடர்ந்து சவால்களாக இருப்பதாக உலக வங்கி தெரிவித்துள்ளது
வறுமை
கோப்பு படம் (பிடிஐ)
Published on: 

புதுடெல்லி,

இந்தியாவில் கடந்த 2011-ம் ஆண்டு முதல் 2023-ம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் சுமார் 49 கோடி மக்கள் வறுமையில் இருந்து மீண்டுள்ளதாக உலக வங்கி தெரிவித்துள்ளது. நாட்டின் தீவிர வறுமை விகிதம் 27.1 சதவீதத்தில் இருந்து 2.6 சதவீதமாக குறைந்துள்ளதாகவும் தனது புதிய அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

உலக வங்கி வெளியிட்டுள்ள 2026-ம் ஆண்டு அக்டோபர் மாதத்துக்கான வறுமை மற்றும் சமத்துவ அறிக்கையில் இந்த தகவல்கள் இடம்பெற்றுள்ளன.

வறுமை விகிதம் சரிவு

கடந்த 2011-ம் ஆண்டில் இந்தியாவின் மக்கள் தொகையில் 27.1 சதவீதம் பேர் தீவிர வறுமையில் இருந்தனர். இது 2023-ம் ஆண்டில் 2.6 சதவீதமாக குறைந்துள்ளது.அதேபோல், ஒரு நாளைக்கு 4.20 டாலருக்கும் (சுமார் 400 ரூபாய்) குறைவான வருமானத்தில் வாழும் கீழ் நடுத்தர வருமான வறுமை நிலையில் உள்ளவர்களின் எண்ணிக்கையும் கணிசமாக குறைந்துள்ளது. 2011-ம் ஆண்டில் 57.7 சதவீதமாக இருந்த இந்த விகிதம், 2023-ம் ஆண்டில் 16.1 சதவீதமாக சரிந்துள்ளது.இதன் மூலம் சுமார் 496 மில்லியன் மக்கள் வறுமையில் இருந்து மீண்டுள்ளதாக உலக வங்கி தெரிவித்துள்ளது.

ஊதியத்தில் பெரும் வித்தியாசம்

இந்தியாவில் வறுமை குறைந்திருந்தாலும், அதிக ஊதியம் பெறுபவர்களுக்கும் குறைந்த ஊதியம் பெறுபவர்களுக்கும் இடையிலான வித்தியாசம் தொடர்ந்து அதிகமாகவே உள்ளது.அதன்படி, அதிக ஊதியம் பெறும் முதல் 10 சதவீத ஊழியர்களின் சராசரி ஊதியம், குறைந்த ஊதியம் பெறும் கடைசி 10 சதவீத தொழிலாளர்களின் ஊதியத்தை விட 13 மடங்கு அதிகமாக இருப்பதாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு அதிகரிப்பு

கடந்த 2017-ம் ஆண்டு முதல் 2023-ம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் இந்தியாவில் வேலைவாய்ப்பு பெற்றவர்களின் எண்ணிக்கை சுமார் 13.4 கோடி அதிகரித்துள்ளது.குறிப்பாக, கிராமப்புற பெண்கள் அதிக அளவில் ஊதியத்துடன் கூடிய வேலைகளில் சேர்ந்தது வேலைவாய்ப்பு அதிகரிப்புக்கு முக்கிய காரணமாக அமைந்துள்ளது.இருப்பினும், வேலைவாய்ப்பு அதிகரித்த அளவுக்கு உண்மையான ஊதியத்தில் முன்னேற்றம் ஏற்படவில்லை என்றும், குறைந்த உற்பத்தித்திறன் கொண்ட வேலைகளிலேயே வேலைவாய்ப்பு வளர்ச்சி அதிகமாக இருப்பதாகவும் உலக வங்கி சுட்டிக்காட்டியுள்ளது.

கிராமப்புறங்களில் வறுமை அதிகம்

நகர்ப்புறங்களை விட கிராமப்புறங்களில் வறுமை அதிகமாக இருப்பதாகவும் அறிக்கை தெரிவித்துள்ளது.2023-ம் ஆண்டு கணக்கின்படி, கிராமப்புறங்களில் வறுமை விகிதம் 19.3 சதவீதமாகவும், நகர்ப்புறங்களில் 8.6 சதவீதமாகவும் உள்ளது.மேலும், உத்தரபிரதேசம் முதல் மேற்கு வங்காளம் வரையிலான மாநிலங்களில் நாட்டின் ஏழைகளில் சுமார் 57 சதவீதம் பேர் வசிப்பதாகவும் உலக வங்கி அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்தியாவில் வறுமை கணிசமாக குறைந்துள்ள போதிலும், ஊதிய ஏற்றத்தாழ்வு, வேலைவாய்ப்பின் தரம் மற்றும் கிராமப்புற வறுமை ஆகியவை தொடர்ந்து சவால்களாக இருப்பதாக உலக வங்கி தெரிவித்துள்ளது

X