

புதுடெல்லி,
பீகார் மாநிலம் பாட்னாவைச் சேர்ந்த ஒரு மருத்துவத் தம்பதிக்கு நீண்ட நாட்களுக்கு பிறகு மகப்பேறு கிடைத்தது. அந்த பெண் தனது 33 வயதில் கர்ப்பம் தரித்து இருந்தார். அவருக்கு வழக்கமான கர்ப்பகால பரிசோதனை செய்யப்பட்டது. அப்போது குழந்தை இதய குறைபாட்டோடு இருப்பது கண்டறியப்பட்டது.
அது ஒருவித, அரிய, பிறவி இதயக்குறைபாடு ஆகும். இது நுரையீரலில் இருந்து வரும் ஆக்சிஜன் செறிந்த ரத்தத்தை வழக்கமான முறையில் இதயத்துக்கு திருப்பாத ஒரு நிலையாகும். இத்தகைய நிலைகளுக்கு உடனடியாக சிகிச்சை அளிக்காவிட்டால், அது உடனடி விபரீதத்தை ஏற்படுத்தக்கூடும் என்றும், பிறந்தவுடன் சரியான நேரத்தில் அறுவை சிகிச்சை செய்தால் காப்பாற்றி விடலாம் என்றும், டெல்லியில் அவரை பரிசோதித்த ஒக்லாவின் போர்டிஸ் மருத்துவமனை இதயசிகிச்சை துறைத்தலைவர் மருத்துவர் கே.எஸ்.அய்யர் கூறினார்.
இதற்கு அந்த பெற்றோர் சம்மதித்தனர். அதற்காக மருத்துவமனை அருகிலேயே குடிபெயர்ந்தனர். இதனைத் தொடர்ந்து கர்ப்பத்தில் குழந்தையின் நிலைமை அடிக்கடி கண்காணிக்கப்பட்டு வந்தது.
இந்த நிலையில் பிரசவ நாள் வந்தது. அந்த பெண் அழகான குழந்தையை பெற்றெடுத்தார். ஆனால் பிறந்த பொழுதில் இருந்தே அது சுவாசத்துக்கு சிரமப்பட்டது. உடனடியாக செயற்கை சுவாசம் அளித்து கண்காணித்தனர். இதற்கிடையே பல பரிசோதனைகள் செய்து அந்த குறைபாடு இருப்பதை உறுதிப்படுத்தினர்.
இதனைத் தொடர்ந்து திறந்த நிலை இதய அறுவை சிகிச்சைக்கு மறுநாளே ஏற்பாடு செய்யப்பட்டது. மருத்துவமனையின் இதய நிபுணர் குழு அவசர அறுவை சிகிச்சையில் ஈடுபட்டன. இந்த அறுவை சிகிச்சை 4 மணிநேரம் நீடித்தது. அறுவை சிகிச்சையின்போது மருத்துவர்கள் ஆக்சிஜன் செறிந்த ரத்த ஓட்டத்தை இதயத்தின் இடது பக்கத்துக்கு திருப்பி விட்டனர். குழந்தை காப்பாற்றப்பட்டு விட்டது.
அறுவை சிகிச்சைக்கு பிறகு, குழந்தையின் உடல்நிலை நாளுக்கு நாள் முன்னேற்றம் அடைந்தது. 11 நாட்கள் மருத்துவமனையில் வைத்து பார்த்துக்கொண்டனர். குழந்தை நன்றாக தேறியதும் பெற்றோரிடம் தரப்பட்டது. தற்போது குழந்தை ஆரோக்கியமாக உள்ளது.
பிறந்த குழந்தைக்கு இதய அறுவைசிகிச்சை செய்வது என்பது சவாலான காரியம் ஆகும். இதனை திறம்பட செய்து முடித்த மருத்துவர்கள் குழுவை பலரும் பாராட்டினர். இதுபோன்ற பிரச்சினைகள் சுமார் 10 ஆயிரம் குழந்தைகளில் ஒரு குழந்தைக்கு ஏற்படுகிறது என்றும், இதற்கு அவசர அறுவை சிகிச்சை அவசியமானது என்றும் மருத்துவமனை நிர்வாகம் கூறியது.