

மும்பை,
வடக்கு ஆந்திராவிற்கு அருகே வங்காள விரிகுடாவில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி மற்றும் அரபிக்கடல் வரை நிலவும் தாழ்வுப் பகுதி காரணமாக மராட்டிய மாநிலத்தில் அடுத்த ஒரு வாரத்திற்கு கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.
இதன்படி மும்பை, தானே மற்றும் பல்கார் ஆகிய மாவட்டங்களுக்கு நேற்றைய தினம்(வெள்ளிக்கிழமை) வானிலை மையம் சார்பில் கனமழைக்கான மஞ்சள் அலர்ட் விடுக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், நேற்று இரவு முழுவதும் மும்பை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் கனமழை கொட்டித் தீர்த்தது.
நகரின் பிரதான சாலைகளில் தண்ணீர் தேங்கியதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. சில இடங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து, வரும் 19-ந்தேதி வரை மராட்டிய மாநிலத்தின் பல்வேறு பகுதிகளுக்கு கனமழைக்கான ஆரஞ்ச் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.