

புதுடெல்லி
இமாசல பிரதேசத்தில் சக்தி வாய்ந்த வெடிகுண்டு வெடித்த வழக்கில் என்.ஐ.ஏ. 3 பேரை இன்று கைது செய்துள்ளது.
இமாசல பிரதேசத்தின் நலகார் மாவட்டத்தில் கடந்த ஜனவரி 1-ந்தேதி காலையில் புது வருட பிறப்பில், நலகார் காவல் நிலையத்தில் சக்தி வாய்ந்த வெடிகுண்டு ஒன்று வெடிக்க செய்யப்பட்டது.
இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்தனர். இந்த நிலையில், கடந்த மே 8-ந்தேதி மறுவழக்கு பதிவு செய்து, தேசிய புலனாய்வு முகமை (என்.ஐ.ஏ.) அதிகாரிகள் விசாரணை நடத்த தொடங்கினர்.
இதன் தொடர்ச்சியாக, மகாவீர் குமார் என்ற ககா, அஜய் மெஹ்ரா மற்றும் மன்பிரீத் சிங் என்ற மணி ஆகிய 3 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்கள் 3 பேரும் சிம்லாவில் உள்ள என்.ஐ.ஏ. கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டனர்.
இதில், மகாவீர் குமார், அஜய் மெஹ்ரா ஆகிய இருவருக்கு 8 நாட்கள் போலீஸ் காவல் விதிக்கப்பட்டது. மன்பிரீத் சிங்கிற்கு நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டது.
இந்த வழக்கின் தொடர் விசாரணையில், இன்று அதிகாலை வேறு 3 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்கள் பஞ்சாப்பை சேர்ந்தவர்கள். இதன்படி அர்ஷ்தீப் சிங் என்ற அர்ஷ் கொண்டாலா, கரண் பிரதாப் மற்றும் தில்ஜோத் சைனி என அவர்கள் அடையாளம் காணப்பட்டு உள்ளனர். என்.ஐ.ஏ. அதிகாரிகள் அவர்களை இன்று கோர்ட்டில் ஆஜர்படுத்துவார்கள். இதனால், வழக்கில் மொத்த கைது எண்ணிக்கை 6 ஆக உயர்ந்து உள்ளது.