

சிம்லா,
இமாசல பிரதேசத்தில் காங்கிரஸ் வசம் இருந்த ஆட்சியை பா.ஜனதா தட்டிப்பறித்துள்ளது. இருப்பினும் தேர்தலில் பாரதீய ஜனதா வெற்றி பெற்றாலும் முதல்-மந்திரி வேட்பாளர் பிரேம் குமார் துமால் தோல்வியை தழுவினார். பாரதீய ஜனதா கட்சி வெற்றி பெற்றாலும் துமால் தோல்வியானது அக்கட்சிக்கு பெரும் வருத்தத்தை ஏற்படுத்தியது. இமாசலபிரதேசத்தில் முதல்மந்திரி பதவி யாருக்கு என்ற கேள்வி எழுந்தது. மாநிலத்தில் முதல்-மந்திரியை தேர்வு செய்யும் பொறுப்பு மத்திய மந்திரிகள் நிர்மலா சீதாராமன், நரிந்தர் தோமர் ஆகியோரிடம் ஒப்படைக்கப்பட்டது.
புதிய முதல்மந்திரி பதவிக்கு மத்திய சுகாதாரத்துறை மந்திரி ஜே.பி. நட்டா பெயர் இடம்பெற்றது. அதே நேரத்தில் 7வது முறை வென்றுள்ள மொகிந்தர் சிங், 5வது முறை வெற்றி பெற்ற ராஜீவ் பிந்தால், 4வது முறை வெற்றி பெற்றிருக்கிற மாநில பாரதீய ஜனதா முன்னாள் தலைவர் சுரேஷ் பரத்வாஜ் மற்றும் கிருஷன் கபூர் ஆகியோரது பெயர்களும் அடிபட்டது. இமாசல பிரதேச மாநிலத்தில் பிரேம் குமார் துமால் முதல்-மந்திரி வேட்பாளராக அறிவிக்கப்படுவதற்கு முன்னதாகவே அவ்வரிசையில் முதன்மையாக இருந்தவர் ஜே.பி.நட்டா.
இதற்கிடையே யார் அடுத்த முதல்-மந்திரி என்ற போட்டியில் பா.ஜனதாவின் மற்றொரு தலைவர் ஜெய்ராம் தாகூர் பெயரும் முன்னிலை பெற்றார். ஜெய்ராம் தாகூருக்கு கட்சியிலும், ஆட்சியிலும் பணியாற்றிய அனுபவம் உள்ளது, மேலும் அவருக்கு ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் ஆதரவும் இருக்கிறது. எனவே முதல்-மந்திரி யார்? என்ற போட்டியில் ஜே.பி. நட்டா மற்றும் ஜெய்ராம் தாகூர் பெயர்களே முன்னிலை பெற்றது.
இருப்பினும் தேர்தலை பிரேம் குமார் துமால் தலைமையில் சந்தித்ததால் அவரையே முதல்-மந்திரியாக்க வேண்டும் என்ற கோரிக்கையும் எழுகிறது, ஆனால் தோல்வியை தழுவியவரை முதல்மந்திரி பதவியில் அமர்த்துவதற்கு வாய்ப்பு பிரகாசமாக இருக்காது எனவும் கூறப்படுகிறது. ஜே.பி. நட்டா அல்லது ஜெய்ராம் தாகூரை முதல்-மந்திரியாக்கும் நகர்வுக்கு துமாலின் ஆதரவாளர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இறுதியில் ஜெய்ராம் தாகூர் முதல்-மந்திரியாக தேர்வு செய்யப்பட்டார். அவருக்கு துமால் மற்றும் ஜே.பி.நட்டா உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து உள்ளார்கள்.