இந்தி நடிகர் சன்னி தியோல், பா.ஜனதாவில் சேர்ந்தார்: பஞ்சாப் மாநிலத்தில் இருந்து நாடாளுமன்றத்துக்கு போட்டி?

இந்தி நடிகர் சன்னி தியோல், பாரதீய ஜனதா கட்சியில் சேர்ந்தார். அவர் பஞ்சாப் மாநிலத்தில் இருந்து நாடாளுமன்றத்துக்கு போட்டியிடுகிறார்.
இந்தி நடிகர் சன்னி தியோல், பா.ஜனதாவில் சேர்ந்தார்: பஞ்சாப் மாநிலத்தில் இருந்து நாடாளுமன்றத்துக்கு போட்டி?
Published on

புதுடெல்லி,

பிரபல இந்தி நடிகர் சன்னி தியோல் (வயது 62). இவர் நடிகர் தர்மேந்திரா, பர்காஸ் கவுர் தம்பதியரின் மகன் ஆவார்.

தர்மேந்திரா, ராஜஸ்தான் மாநிலம், பிகானீர் தொகுதியில் இருந்து 2004-ம் ஆண்டு பாரதீய ஜனதா கட்சி எம்.பி.யாக தேர்ந்தெடுக்கப்பட்டு பணியாற்றியவர்.

இந்த நிலையில், கடந்த 19-ந் தேதி புனேயில் பாரதீய ஜனதா கட்சித்தலைவர் அமித் ஷாவை சன்னி தியோல் சந்தித்துப் பேசினார். அதைத் தொடர்ந்து அவர் பாரதீய ஜனதா கட்சியில் சேரக்கூடும் என ஊகங்கள் எழுந்தன.

சன்னி தியோல், டெல்லியில் உள்ள பாரதீய ஜனதா கட்சியின் தலைமை அலுவலகத்துக்கு நேற்று சென்றார். அங்கு அவர் கட்சியின் மூத்த தலைவர்களும், மத்திய மந்திரிகளுமான நிர்மலா சீதாராமன், பியூஸ் கோயல் ஆகியோர் முன்னிலையில் பாரதீய ஜனதா கட்சியில் சேர்ந்தார்.

அவரை நிர்மலா சீதாராமன் வரவேற்றார். அப்போது அவர், சன்னி தியோல், எழுச்சி மிக்கவர், பிரபலமானவர், பார்டர் போன்ற படங்களில் நேர்த்தியாக நடித்து இருக்கிறார். மக்களின் நாடியை அவர் புரிந்துகொள்வார் என குறிப்பிட்டார்.

சன்னி தியோல் கூறும்போது, எனது தந்தை தர்மேந்திரா, மறைந்த தலைவர் வாஜ்பாய்க்கு பிடித்தமானவர். நான் பிரதமர் மோடிக்கு பிடித்தமானவனாக இருப்பேன் என்று நம்புகிறேன் என குறிப்பிட்டார்.

சன்னி தியோலின் பூர்வீகம் பஞ்சாப் மாநிலம். அங்கு பாரதீய ஜனதா கட்சி, சிரோமணி அகாலிதளம் கட்சியுடன் கூட்டணி அமைத்து 3 நாடாளுமன்ற தொகுதிகளில் போட்டியிடுகிறது. அதில் ஒன்றான குர்தாஸ்பூர் தொகுதியில் இருந்து சன்னிதியோல் போட்டியிடுவார் என பா.ஜனதா அறிவித்து உள்ளது.

இந்த தொகுதியில் மறைந்த நடிகர் வினோத் கன்னா (பாரதீய ஜனதா கட்சி), 2014 நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட்டு வென்றவர். அவர் 2017-ல் மறைந்த பின்னர் நடந்த இடைத்தேர்தலில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றது. மீண்டும் அந்த தொகுதியை கைப்பற்றவே சன்னி தியோலை களம் இறக்க பாரதீய ஜனதா கட்சி விரும்புகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com