இந்து அமைப்பு பெண் பிரமுகர் மயங்கி விழுந்ததால் பரபரப்பு

ரூ.5 கோடி மோசடி வழக்கு விசாரணையின்போது இந்து அமைப்பு பெண் பிரமுகர் மயங்கி விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. அவர், தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
Published on

பெங்களூரு:

ரூ.5 கோடி மோசடி வழக்கு விசாரணையின்போது இந்து அமைப்பு பெண் பிரமுகர் மயங்கி விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. அவர், தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

ரூ.5 கோடி மோசடி

உடுப்பி மாவட்டம் பைந்தூரை சேர்ந்தவர் கோவிந்தபாபு பூஜாரி. தொழில்அதிபரான இவர், பெங்களூருவில் உள்ள 90-க்கும் மேற்பட்ட இந்திரா உணவகங்களுக்கு உணவுகளை சப்ளை செய்து வருகிறார். இதுதவிர ஆஸ்பத்திரிகள், தனியார் நிறுவனங்களுக்கும் கோவிந்தபாபு உணவுகளை வழங்கி வருகிறார். இந்த நிலையில், பா.ஜனதா சார்பில் போட்டியிட எம்.எல்.ஏ. சீட் வாங்கி தருவதாக கூறி கோவிந்தபாபுவிடம் ரூ.5 கோடி வாங்கி மோசடி செய்யப்பட்டு இருந்தது.

இதுகுறித்து பண்டேபாளையா போலீசார் வழக்குப்பதிவு செய்திருந்தனர். தற்போது அந்த வழக்கு பெங்களூரு மத்திய குற்றப்பிரிவுக்கு மாற்றப்பட்டு விசாரணை நடந்து வருகிறது. ரூ.5 கோடி மோசடி தொடர்பாக இந்து அமைப்பின் பெண் பிரமுகர் சைத்ரா குந்தாப்புரா, ககன் கடூரு, பிரஜ்வல், தன்ராஜ், ஸ்ரீகாந்த், ரமேஷ் ஆகிய 6 பேர் முதலில் கைது செய்யப்பட்டு இருந்தனர். அவர்களை 10 நாட்கள் காவலில் எடுத்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

எனக்கு தொடர்பு இல்லை

நேற்று முன்தினம் சென்னநாயக் என்பவரை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்திருந்தனர். அவரையும் கோர்ட்டில் ஆஜர்படுத்திவிட்டு போலீசார் தங்களது காவலில் எடுத்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இந்த மோசடி விவகாரம் குறித்து சைத்ராவிடம் போலீசார் விசாரித்தனர். ஆனால் இந்த மோசடிக்கும், தனக்கும் எந்த தொடர்பும் இல்லை என்றும், தான் யாரிடமும் பணம் வாங்கவில்லை, ககன் கடூரு தான் பணம் வாங்கியதாக தெரிவித்தார். சைத்ராவுடன், கைதான மற்ற 5 பேரையும் வைத்து விசாரித்து சில தகவல்களை போலீசார் பெற்றிருந்தனர். மோசடியில் தொடர்புடைய மற்றவர்கள் பற்றி சைத்ரா போலீசாரிடம் எதுவும் தெரிவிக்கவில்லை என்று கூறப்படுகிறது.

சைத்ரா மயங்கி விழுந்தார்

இதற்கிடையில், நேற்று முன்தினம் இரவு விசாரணை முடிந்ததும் பெண்கள் பாதுகாப்பு மையத்தில் சைத்ரா தங்க வைக்கப்பட்டார். நேற்று காலை 8 மணிக்கு அவர் சாம்ராஜ்பேட்டையில் உள்ள மத்திய குற்றப்பிரிவு போலீஸ் அலுவலகத்திற்கு அழைத்து வரப்பட்டார். அவரிடம் அரை மணிநேரத்திற்கும் மேலாக விசாரணை நடந்து கொண்டிருந்தது. அந்த சந்தர்ப்பத்தில் திடீரென்று சைத்ரா மயங்கி கீழே விழுந்தார். அடுத்த சில நிமிடத்தில் அவரது வாயில் இருந்து நுரை வந்தது.

இதனால் மத்திய குற்றப்பிரிவு அலுவலகத்தில் பரபரப்பு உண்டானது. உடனடியாக அருகில் உள்ள விக்டோரியா ஆஸ்பத்திரிக்கு சைத்ரா கொண்டு செல்லப்பட்டார். அங்கு தீவிர கண்காணிப்பு பிரிவில் அனுமதித்து டாக்டர்கள் சிகிச்சை அளித்தார்கள். அவருக்கு வலிப்பு ஏற்பட்டு மயங்கி விழுந்ததும், வாயில் நுரை தள்ளியதும் தெரியவந்துள்ளது. நேற்று காலையில் அவர் சாப்பிடாமல் விசாரணைக்கு வந்ததும் தெரியவந்துள்ளது.

ஆரோக்கியமாக உள்ளார்

தொடர் சிகிச்சைக்கு பின்பு நேற்று மாலையில் சைத்ராவின் உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டது. அவருக்கு நடத்தப்பட்ட ரத்த அழுத்தம், இ.சி.ஜி. பரிசோதனையில் சைத்ராவுக்கு எந்த பிரச்சினயும் இல்லை என்று விக்டோரியா ஆஸ்பத்திரி டாக்டர்கள் தெரிவித்துள்ளனர். அவர் ஆரோக்கியமாக இருப்பதாகவும், தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.

அதே நேரத்தில் கைதான மற்ற 6 பேரிடமும் நேற்று தொடர்ந்து விசாரணை நடைபெற்றது. குறிப்பாக கோவிந்தபாபுவிடம் பெற்ற ரூ.5 கோடியை யாரெல்லாம் பங்கிட்டு கொண்டுள்ளனர். அந்த பணத்தை என்ன செய்தீர்கள்? என்பது குறித்து விசாரித்து தகவல்களை பெற்றுள்ளனர். கடந்த 6 மாதத்தில் நடத்திய வங்கி பண பரிமாற்றம் குறித்தும் அவர்களிடம் போலீசார் விசாரித்து தகவல்களை சேகரித்துள்ளனர்.

தடயவியல் ஆய்வுக்கு செல்போன்கள்

அதே நேரத்தில் கைதானவர்களின் செல்போன்களை தடயவியல் ஆய்வுக்கு போலீசார் அனுப்பி வைத்திருப்பதாகவும், அந்த அறிக்கைக்காக போலீசார் காத்திருப்பதும் தெரியவந்துள்ளது. இதற்கிடையில், எம்.எல்.ஏ. சீட்டுக்காக கோவிந்தபாபுவிடம் பா.ஜனதாவினர் சிலர் நெருக்கம் காட்டியது தொடர்பான ஆதாரங்களும் போலீசாருக்கு கிடைத்துள்ளது.

ஏனெனில் சட்டசபை தேர்தல் பிரசாரத்தின் போது கர்நாடகம் வந்திருந்த மத்திய உள்துறை மந்திரி அமித்ஷாவை கோவிந்தபாபு வரவேற்கும் புகைப்படங்களும் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. கோவிந்தபாபுவுக்கு சீட் கிடைக்காது என்று உறுதியாகி இருந்தாலும், பா.ஜனதா பிரமுகர்கள் நெருக்கம் காட்டியது ஏன்? என்ற கேள்வியும் எழுந்துள்ளது. அதுபற்றியும் கைதானவர்களிடம் விசாரணை நடந்து வருகிறது.

5 ஆண்டுக்கு முன்பும் ஆஸ்பத்திரியில் சிகிச்சை

ரூ.5 கோடி மோசடி வழக்கில் கைதான சைத்ராவை கடந்த 2018-ம் ஆண்டு குக்கே சுப்பிரமணியா பகுதியில் வைத்து குருபிரசாத் என்பவரை தாக்கியதாக உடுப்பி போலீசாரால் கைது செய்யப்பட்டு இருந்தார். அவரிடம் விசாரிக்க 14 நாட்கள் போலீசாருக்கு கோர்ட்டு அனுமதி வழங்கி இருந்தது. அப்போது உடல் நலக்குறைவு எனக்கூறி 14 நாட்கள் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றதற்கு சைத்ராவுக்கு, கோர்ட்டு எச்சரிக்கை விடுத்து மீண்டும் 14 நாட்கள் அவரை காவலில் வைத்து விசாரிக்க போலீசாருக்கு அனுமதி வழங்கி இருந்தது. தற்போது இந்த மோசடி வழக்கிலும் தற்போது அவர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com