

திருவனந்தபுரம்,
கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் ஆர்.எஸ்.எஸ். நூற்றாண்டு விழா கொண்டாட்டம் நடைபெற்றது. இதில் ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் கலந்து கொண்டு உரையாற்றினார். விழாவில் அவர் பேசியதாவது:-“ஆர்.எஸ்.எஸ். யாரையும் எதிர்ப்பதற்காக இங்கு இல்லை.
அதற்கு எதிரிகள் என்று யாரும் இல்லை. ஆனால் பலர் ஆர்.எஸ்.எஸ்.-ஐ கண்டு அஞ்சுகிறார்கள். அத்தகையவர்களே சங்கத்திற்கு எதிராக பிரசாரம் செய்கிறார்கள்.ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் நோக்கம் நாட்டிற்கும் உலகிற்கும் நன்மை செய்வதே ஆகும். உலகம் முழுவதும் அமைதியையும் மகிழ்ச்சியையும் பரப்புவதே சங்கத்தின் செயலாகும். கடந்த 100 ஆண்டுகளில் ஆர்.எஸ்.எஸ். சமூகத்தின் பல கோரிக்கைகளை வெற்றிகரமாக நிறைவேற்றியுள்ளது.
அரசாங்கத்திடம் இருந்து ஒரு பைசா கூட பெறாமல் 1.30 லட்சம் சேவைத் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன. ஆர்.எஸ்.எஸ். வெளியில் இருந்து ஒரு பைசா கூட வாங்காமல் செயல்படுகிறது.அரசியலில் சுயசேவகர்கள் உள்ளனர். ஆனால் சங்கம் ஒரு அரசியல் இயக்கம் அல்ல. ராம ஜென்மபூமியும், சட்டப்பிரிவு 370-மும் அரசியல் பிரச்சினைகள் அல்ல. அவை இந்தியாவின் ஒற்றுமையையும் ஒருமைப்பாட்டையும் பாதிக்கும் விஷயங்கள். இந்தியாவை ஒரு தேசமாக உருவாக்கியது ஆங்கிலேயர்கள் அல்ல. அது இந்துத்துவ கலாச்சாரம்” என்றார்.