

புதுடெல்லி,
ஜெய்ஷ்-இ-முகமது, லஷ்கர்-இ-தொய்பா அமைப்புகளுடன் தொடர்புடைய, பாகிஸ்தானை தளமாகக் கொண்ட 23 நபர்களை உபா சட்டத்தின் கீழ் 'பயங்கரவாதிகள்' என மத்திய அரசு அறிவித்துள்ளது. இது தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சகம் இன்று அரசிதழ் அறிவிப்பை வெளியிட்டது.
இது குறித்து மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிவிப்பில்,
ஜெய்ஷ்-இ-முகமது மற்றும் லஷ்கர்-இ-தைபா அமைப்புகளுடன் தொடர்புடைய, பாகிஸ்தானை சேர்ந்த 23 பேர் சட்டவிரோத நடவடிக்கை தடுப்புச் சட்டத்தின் (உபா) கீழ் பயங்கரவாதியாக அறிவிக்கப்படுகிறார்கள்.
இந்த நபர்கள், பயங்கரவாத ஆட்சேர்ப்பு, ஊடுருவல், பயிற்சி, ட்ரோன்கள் மூலம் ஆயுதங்கள் வழங்குதல் மற்றும் ஜம்மு காஷ்மீரில் தாக்குதல்களைத் திட்டமிடுதல் போன்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர்.
23 நபர்களில், மூவர் லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாத அமைப்பின் நிறுவனர் ஹபீஸ் முஹம்மது சயீத்தின் நெருங்கிய கூட்டாளிகள் என தெரிய வந்ததுள்ளது. 3 பேர் 2016ம் ஆண்டு நக்ரோட்டாவில் உள்ள ராணுவ முகாம் மீது நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலில் ஈடுபட்டவர்கள் என்பது விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
பட்டியலில் 17 பாகிஸ்தானியர்கள், 6 இந்தியர்கள் என 23 பேரும் பாகிஸ்தான் மற்றும் பாக். ஆக்கிரமிப்பு காஷ்மீரிலிருந்து செயல்படுவது அம்பலம் ஆகி உள்ளது. எல்லை தாண்டிய பயங்கரவாதத்திற்கு நிதியுதவி செய்ததாக தகவல் வெளியாகி உள்ளது. இருவர் 2018ம் ஆண்டு சுன்ஜ்வான் ராணுவ முகாம் மீது நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலில் ஈடுபட்டவர்கள்.
இவ்வாறு மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.