கார்-ஆட்டோ-கன்டெய்னர் லாரி மோதி கோர விபத்து; பெண்கள் உள்பட 6 பேர் பலி

கர்நாடகாவில் கார், ஆட்டோ, கன்டெய்னர் லாரி மோதிய சங்கிலித்தொடர் விபத்தில் பெண்கள் உள்பட 6 பேர் உடல் நசுங்கி உயிரிழந்தனர்
விபத்து
Published on

கர்நாடக மாநிலம் சிக்பள்ளாப்பூர் மாவட்டம் பாகேபள்ளி அருகே தேசிய நெடுஞ்சாலையில் பயணிகள் ஆட்டோ ஒன்று சென்று கொண்டிருந்தது. இந்த ஆட்டோவில் டிரைவர் மற்றும் பெண்கள் உள்பட 10 பேர் பயணம் செய்தனர். அந்த சமயத்தில் பின்னால் வேகமாக வந்த கார் ஒன்று ஆட்டோவின் பின்புறம் பயங்கரமாக மோதியது. இதனால் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த ஆட்டோ, தாறுமாறாக ஓடி முன்னால் சென்று கொண்டிருந்த கன்டெய்னர் லாரியின் பின்புறம் மோதியது.கண் இமைக்கும் நேரத்தில் நடந்த இந்த கோர விபத்தில் ஆட்டோ அப்பளம் போல சுக்குநூறாக நொறுங்கியது. இந்த சங்கிலி தொடர் விபத்தில் ஆட்டோவில் பயணித்த 5 பெண்கள், டிரைவர் என 6 பேர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.

மேலும் ஒருவர் பலி

மேலும் 4 பெண்கள் பலத்த காயம் அடைந்து உயிருக்கு போராடிக் கொண்டிருந்தனர். சிட்லகட்டா அரசு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை அளித்தும் ஒரு பெண் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். மீதமுள்ள 3 பெண்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.இதுகுறித்து போலீசார் நடத்திய விசாரணையில், பலியானவர்கள் சிந்தாமணி தாலுகா பெரேசந்திரா கிராமத்தை சேர்ந்த உமாதேவி (வயது 55), விஜயா (40), லட்சுமம்மா (50), சரோஜம்மா (65) மற்றும் ஆட்டோ டிரைவர் அஞ்சினப்பா (35) என்பதும், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது அருணம்மா என்பதும் தெரியவந்தது.மேலும், ஒரே கிராமத்தை சேர்ந்த 9 பெண்கள் அஞ்சினப்பாவின் ஆட்டோவில் பாகேபள்ளியில் உள்ள சுங்கலம்மா கோவிலுக்கு சென்றுவிட்டு திரும்பி வந்தபோது விபத்தில் சிக்கியதும் தெரியவந்தது.

எஸ்பி ஆய்வு

விபத்து நடைபெற்ற இடத்திற்கு நேரில் வருகை தந்த மாவட்ட எஸ்பி குஷால் சவுக்சே கூறியதாவது: அதிவேகத்தில் வந்த தார் கார் ஆட்டோ மீது மோதியுள்ளது. இதனால், கட்டுப்பாட்டை இழந்த ஆட்டோ டிரைவர், முன்னால் நின்று கொண்டிருந்த லாரி மீது மோதியுள்ளார். இந்த பயங்கர விபத்தில் ஆட்டோ இருபக்கமும் நசுங்கியது. விபத்தை ஏற்படுத்திய கார் டிரைவர் தப்பி ஓடிவிட்டார். அவரை பற்றிய தகவல் கிடைத்தது.உரிய சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும்” என்றார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com